“எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாதென்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளதாக அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் 26 வருடங்களுக்கு முன்னதாக நிராகரித்த அதே மாகாணசபையினை இப்போது தூக்கிக் கொண்டாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மிக முக்கியமாக எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்தேசத்திற்கு தெரிந்திருக்க வேண்டிய சம்பவம் ஒன்றுள்ளது. இச்சம்பவம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் அதே வருடம் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் நடந்திருந்தது. இந்தியாவின் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட குழு இலங்கை வந்திருந்தது. அதன்போது முக்கியமான நபர்களாக இன்றைய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் என பலரும் இருந்திருந்தனர்.
அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினையும் அப்போது சந்தித்திருந்தார். அன்று நானும் கலந்து கொண்டிருந்தேன். இந்திய தரப்பினால் சந்திப்பில் கூறப்பட்டவற்றினுள் பிரதானமானது தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனபதாகும். அந்த் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் 13ம் திருத்தம் சம்மந்தமாக விமர்சனங்களை முன்வைத்து அந்த தீர்வுத்திட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என கூறியபோது நாராயணன் கோபித்து பதிலளித்திருந்தார்.
தமிழருக்கு எது நல்லதென்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும் எனக்கூறி 13 வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அங்கு வற்புறுத்தப்பட்டிருந்தது. இது எங்கள் இனத்தின் அரசியல் சரித்திரத்தில் முக்கியமானது. சந்திப்பின் பின்னர் தமிழ்தேசிய வாத அரசியல் நிலைப்பாட்டில் அடிப்படை மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கின்றது. அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பதை பதிவுசெய்யும் நோக்குடனேயே நாம் மக்களை சந்திக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலின் பின்னர், குத்துரக்கரணங்கள்.
2008ம் ஆண்டின் ஒக்ரோபர் முற்பகுதியில் தலைவர் பிரபாகரனை வன்னிக்குச் சென்று சந்திப்பதற்கு முன்னதாக சம்பந்தனிடம் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையினை விட்டுக்கொடுக்காத வகையில் தீர்வு வலியுறுத்தப்படவேண்டும். இன்று யுத்த தீர்;வொன்றை சர்வதேச ஆதரவுடன் வழங்கினாலும், புலிகளை அழித்தாலும் கூட தமிழர்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் மாற்றம் இருக்காது என கூறினால் மட்டுமே சர்வதேசம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும்.தற்போதைய சூழலினில் தாங்களே மிக முக்கியமான ஒரு நபர்.அவ்வகையினில் தாங்கள் பகிரங்கமாக சர்வதேசத்திற்கு இதனை அறிவிக்கவேண்டுமென கோரியுமிருந்தார்.
அண்மைய சிவில் சமூக மன்னார் கூட்டத்திலும் இவ்விடயம் மீள இரா.சம்பந்தனுக்கு நினைவுபடுத்தப்பட்டது. மக்களுக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கவேண்டும். அப்போது கஜேந்திரனிடம் சம்பந்தன் கூறுகையினில் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றேன். ஒஸ்லோ அடிப்படையில் ஒரு சமஸ்டி தீர்வுக்கு புலிகள் இணங்கினால் அந்த தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக முன்வைக்க இணங்கினால் போரை நிறுத்தி வடகிழக்கு இணைந்த தீர்வினை பெறலாம் என் இந்தியா தமக்கு கூறியிருக்கின்றது என கூறியிருந்தார்.ஆனால் பிரபாகரன் தனக்கு பதில் தரவில்லையென்றும் சம்பந்தன் கூறியிருந்தார்.
இவ்விரு சம்பவங்களும் முக்கியமானவை. இன்றுள்ள பல குழப்பங்களுக்கான காரணமாகவும் இவை இருக்கின்றன. அன்று சம்மந்தன் கூறிய சமஸ்டித்தீர்வுக்கு புலிகள் இணங்கியிருந்தால் இனப்படுகொலையை நிறுத்தி இணைந்த வடகிழக்கில் இந்தியா தீர்வினைப்பெற்றுத்தருமெனவும் அதற்கு புலிகள் இணங்கவேண்டும் எனவும் சம்மந்தன் வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்தியா மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட மேற்குலகம் யுத்தத்தின் பின்னர் இரண்டு நாட்களுக்குள் ஒள்றையாட்சிக்குள், பிரிந்த வடகிழக்கில் 13வது திருத்தத்தை ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தது.
புலிகளை படத்திலிருந்து அகற்றிவிடவேண்டும் என்பதற்காக சமஸ்டித்தீர்வுக்குள் இணங்கவேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால் புலிகள் இப்போது படத்தினில் இலலாத நிலையினில் தமிழ்தேசிய கூட்டமைப்பே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.இந்நிலையில், ஒன்றையாட்சிக்குள் 13வது திருததத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று 26வருடங்கள் தமிழர்கள் நிராகரித்த விடயத்தை மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.
1987ம் 28 ஒக்டோபர் மாதம் 13வது திருத்தச் சட்டம் முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் எழுதப்பட்ட கடிதத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் எ.அமிர்தலிங்கம், உபதலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கையொப்பமிட்டு எழுதியுள்ளனர். இதில் 13வது திருத்தம் சம்மந்தமாகவும், மாகாணசபை சட்டமாகவும் குறிப்பிடப்பட்ட 2வது பந்தியில் 13வது திருத்தம் தொடர்பாகவும், மாகாணசபைகள் தொடர்பாகவும் எங்கள் ஏமாற்றத்தை, அரசியல் தீர்வு தொடர்பாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என கூறப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, தீர்ப்பதாகவோ இழப்புக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலோ இது அமையவில்லை என்றும் துன்பங்கள், பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்த யோசனைகள் ஊடாக தீர்க்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாங்கள் இந்தச் சட்டங்களை மக்களுக்கு திருப்பதியளிப்பதாகNவுh, நீதியானதாகவோ, நிலைத்திருக்க கூடிய விடயமாகவே மக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க முடியாது என்றும் நீண்ட கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கவலையுடன் குறிப்பிட்டிருந்தது.
காணி அதிகாரங்கள் தொடர்பில் 13ம் திருத்தத்தில் காணி அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கி;ன்றது. அதனை அமுல்படுத்தினால் தீர்க்கலாம் என்கிறார்கள், இணைந்த வடகிழக்கில் அரச காணி தொடர்பாக ஒரு பெறுமதியற்ற ஒரு விடயமாக இந்தச் சட்டமூலங்கள் ஒரு நிலையினை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் ஆதிக்கம் இல்லாமல் மாகாணசபைகளுக்கு எந்தவித முடிவினையும் எடுக்க முடியாதென குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக சட்ட மூலங்கள் தொடர்பில் முன்மொழிவுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தையும், மாகாணசபைகள் தொடர்பாக முன்மொழிவாக கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை சட்டமூலமாக உருவாக்க விடவேண்டாம் என குறிப்பிட்டிருந்தார்கள். இதுவே நடந்தது.
இன்று இந்த நிலை தலைகீழாக மாறி மாகாணசபைகளை ஆரம்ப புள்ளியாக கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும், கூறும் அளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இந்த 13ம் திருத்தம் தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவோ, தீர்;வுப் பாதையில் ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
13ம் திருத்தம் ஒரு முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உயர்நீதிமன்றிற்கு அரசால் அனுப்பப்பட்டு அன்றிருந்த அரசியலமைப்பிற்கு இடைஞ்சலாக இருக்கின்றதா என்பதை அறிவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றிலிருந்த ஒன்பது நீதவான்களும், அதனைப் படித்து கருத்துக்களை முன்வைத்தார்கள், ஆரம்பத்தில் ஜந்து நீதவான்கள் 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பு அதாவது ஒற்றையாட்சியை மீறியுள்ளது என கூறி அதனை அமுல்ப்படுத்த பாராளுமன்றில் மூன்றினில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜனவாக்கெடுப்பும் நடத்தவேண்டும் எனகூறியிருந்தனர்.
ஒற்றையாட்சியை மீறுவதாக கூறிய ஜந்து நீதவான்களில் ஒருவர் சில மாற்றங்களை செய்தால் இது ஒற்றையாட்சியை மீறவில்லை என கூறுவதாக கூறினார். அதன் பின்னர் சில மாற்றங்களுடன் இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவ்வாறிருக்க அவர்களது தீர்ப்பில் சாரம்சத்தை பார்த்தால் 13ம் திருத்தம் என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் எல்லை என்றும், அதனால் 13ம் திருத்தத்தை பலப்படுத்தினால் ஒற்றையாட்சி முறையினை மீறும் என்றும். அதனை மீறினால் மூன்றினில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என கூறியிருந்தனர்.
26வருடங்கள் நிராகரித்த 13ம் திருத்தத்தை அப்போது எல்லா அரசியல் கட்சிகளும் நிராகரித்து புறக்கணித்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மட்டும் திருத்தம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்து இணைந்த வடகிழக்கில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் தெரிவானார். பின்னர் மாகாணசபையில் ஒன்றுமில்லை என கூறி தமிழீழ பிரகடனம் செய்து இந்தியா தப்பிச்சென்றார்.
எனவே 13ம் திருத்தம் அந்தச் சம்பவத்தின் பின்னர் பேசாப்பொருளாகவே மாறிவிட்டது. இதன் பின்னர் 2008ம் ஆண்டு 13ம் திருத்தம் தொடர்பில் பேசப்பட்டபோது கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பேசும் போது அழிந்துபோன டோடோ பறவை எனக் குறிப்பிட்டு அதனைக் குறித்துப்பேச தயாரில்லை என கூறியிருந்தார்.
எனவே இன்று அந்த கருத்து தலைகீழாக மாறி ஆரம்ப புள்ளியாகவோ, இறுதி தீர்வினை அடை வதற்கான பாதை என்ற போலியான நம்பிக்கையினை ஊட்ட ஒரு சிலர் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் மக்களிடம் கூற விரும்புவது சிங்கள தேசத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது, சமஸ்டி குறித்துப் பேசி ஜ.தே.கட்சி கூட அண்மையில் முன்வைத்த அரசியலமைப்பில் ஒற்றையாட்சியினையே வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கள தேசத்தின் தமிழர் எதிர் இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழர்களுக்கு பெயரளவில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படவேண்டும் என கூறிவருகின்றனர். அதனால் தமிழ் மக்களுக்கும் இதில் எதோ இருக்கின்றது என நினைத்துவிடக் கூடாது. வேறு தரப்புக்கள் கூறும் கருத்துக்களை வைத்துக் கொண்டு எங்கள் இருப்புக்கான முடிவுகளை எடுக்க முடியாது.
13ம் திருத்தம் தொடர்பில் அறிந்து விளங்கிக் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும். பதிலாக நடந்துகொண்டு எதிர்வினையாக செயற்படவேண்டும். அந்த வழியிலே நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவோம். ஜெனீவாவில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்pன்றன. அவையும் கூட ராஜபக்ச அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதே தவிர தமிழர்களுக்கு அதில் எதுவுமே இல்லை. இதே போன்றதே 13ம் திருத்தமும். சரியான பின்னணியில் அணுகவேண்டும்.தமிழ் புத்திஜீவகளுக்கும், சிவில் சமுகத்திற்கும் பாரிய கடமையுள்ளது. உங்கள் சிந்தனைகள் மக்களை சரியான வழியில் கொண்டு செல்வதாக அமையவேண்டும். உன்மைகளை சரியாக விளங்கிக் கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாட்டில் இனத்தின் எதிர்காலம் தொடர்பாக செயற்பட வேண்டும் அது மிக முக்கியம்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.
இப்பத்திரிகையாளர் மாநாட்டினில் முன்னணியின் சர்வதேச அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பிரச்சன்னமாகியிருந்தனர்.