வல்வை நெடியகாடு இ. வி. கழகம் நடாத்திய Jaffna challengers உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டி (படங்கள் இணைப்பு)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம், யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே நடாத்தி வந்த Jaffna challengers உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (28.03.2015) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின் ஒளியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.R.சண்முகதாஸ் அவாகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ திரு.த.குருகுலராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக Hutch தொலைத்தொடர்பு நிறுவன வடபிராந்திய முகாமையாளர் திரு.வி.கவிச்செல்வன் அவாகளும், தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.S.கேசவராஜா அவாகளும், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் திரு.M.நவநீதமணி அவர்களும் கலந்து சிப்பித்தனர்.
முதலில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது, ஆட்டத்தில் 3 இற்கு 1 என்ற கோல்க் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து வானவேடிக்கைகளும், புகைக்கூண்டுகளும் வானை அலங்கரிக்க சர்வதேச ஒழுங்குமுறைப்படி இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்பலப் பரீட்சையில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இதனால் தண்ட உதை வழங்கப்பட, தண்ட உடையில் 3:1 என்ற கோல்கணக்கில் பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வில் வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

































































































