தாயக செய்திகள்

அரசியல் கைதியான, கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

கிளிநொச்சி மண்ணில் சீர்பட நிறைவேறிய சிறைச்சாலைக் கவிஞன் ‘விவேகானந்தனூர் சதீஷ்’ எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா
கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழான விசாரனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான, கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 14.11.2016 திங்கட்கிழமை மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சி நகர கூட்டுறவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு ‘தமிழ் விருட்சம்’ அமைப்பின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் தாங்கினார். ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ இயக்குநர் யோ.புரட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, சுடர்கள் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆசியுரையினை, கிளிநொச்சி சைவமங்கையர் கழகச் செயலாளர் திருமதி செல்வராணி சோமசுந்தரம் வழங்கினார். ‘படைப்பாளிகள் உலகம்’ அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ‘படைப்பாளிகள் உலகம்’ நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்களின் வாழ்த்துரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி சங்கீதா அளித்தார்.
வரவேற்புரையினை ‘படைப்பாளிகள் உலகம்’ செயலாளர் காவலூர் அகிலன் நிகழ்த்தினார். கவியுரையினை சிறையில் இருக்கும் நூலாசிரியரின் புதல்வி கம்ஷா சதீஸ்குமார் அளித்தார். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது தந்தை கைதானார். இப்போது மகளின் வயது பதின்மூன்று ஆகும்.
தலைமையுரையினை கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார். வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூலின் வெளியீடு இடம்பெற்றது. நூலினை நிகழ்வின் முதன்மை விருந்தினர் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஷ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவருக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டது.
சிறப்புரையினை மன்னார் பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆற்றினார். நூலின் விமர்சன உரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் சத்தியநாதன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து வவுனியா ‘தமிழ் விருட்சம்’ அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களினால் நூலாசிரியருக்கான நினைவுப் பரிசில் அவரது தாயார் அவர்களிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விருந்தினர் உரைகளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா, வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன் ஆகியோர் வழங்கினர்.
முதன்மை விருந்தினர் உரையினை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கினார். நூலாசிரியர் எழுதிய முதலாவது கவிதை நூலாகிய ‘இரும்பு சிறைகளுக்கு பின்னால்’ கவிதை நூலும் அறிமுகம் செய்யப்பட்டது.
நன்றியுரையினை கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினைச் சேர்ந்த மகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சயந்தன், எஸ்.சுகிர்தன், அஸ்மின், பா.அரியரட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுகள் நிறைவாகும் வரை அனைத்து விருந்தினர்களும் நிகழ்வுடன் இணைந்து இருந்தமை சிறப்பாக இருந்தது.

நன்றி

யோ புரட்சி

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *