Search

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க TNA உடன் கூட இணையத் தயார் – பிள்ளையான்

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் கூட இணைந்து கொள்ளத் தயார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற கலாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக் கூடாது என்பதனை தாம் அண்மையில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தெற்கு கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்கு பிரதி அமைச்சர் கருணாவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்வரத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் போன்றவர்களை நாம் தைரியமற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *