சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவினால் இன்னமும் முக்கிய பங்கை வகிக்க முடியும். ஆனால், புதுடெல்லியில் தற்போதைய அரசாங்கம் இல்லாத சூழலில் தான் அது சாத்தியமாகும்.
இவ்வாறு கூறுகிறார் புதுடெல்லி அரசியல் ஆய்வாளரும், ஐபிஎன் செய்திப் பிரிவின் தலைவருமான ஆர்.ராஜகோபாலன்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சூழலில் – இந்திய – சிறிலங்கா உறவுகள் குறித்து ஐபிஎன் இணைய வாசகர்களின் கேள்விகளுக்கு, ஆர்.ராஜகோபாலன் அளித்த சூடான பதில்கள்.
கேள்வி (வின்னி) : இந்தியாவில் குழப்பமான நிலை உள்ளதா?
பதில்: ஆம். எல்லாவற்றுக்குமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இன் தவறுகள் தான் காரணம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1 இன் காலத்தில் இந்திய – சிறிலங்கா கொள்கை புதைக்கப்பட்டு விட்டது.
அப்போது திமுகவின் ஆட்சி இடம்பெற்ற மாநில அரசாங்கத்தை மத்திய அரசு கேட்கவில்லை.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா சாட்சியாக இருந்தது.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி கண்டதால் தான் இந்தக் குழப்பநிலை நிலவுகிறது.
கேள்வி (ஆர்.முகுந்தன்) : தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான அனுதாப உணர்வு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக, இது ஒரு காட்டுத் தீ போன்றது. ஆனால் கண்ணுக்குத் தெரியாது.
வெளியே இது புகை போலத் தோன்றினாலும், தீ உறுதியானது.
கேள்வி (சசி): இப்போது சிறிலங்காவை சீனா மடக்குகின்ற நிலையில், ராஜபக்சவை வலுப்படுத்துவதை விட எமக்கு என்ன தெரிவு உள்ளது?
பதில்: அனைத்துலக உறவுகள் தொடர்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இன் பார்வை தவறானது.
இது இந்திய வெளிவிவகார அமைச்சின் மீதுள்ள தவறு.
ஆம், சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவதற்கு ஒரு வழி உள்ளது.
ஆனால் அதற்கு அரசியல் மனோபலம் தேவை.
கேள்வி (கல்பனா) : தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா பலமான கரத்தைப் பயன்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? தலையிடாக் கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கவும், விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவதற்கு அனுமதித்ததற்கும் ராஜீவ்காந்தி கொலைச் சம்பவம் காரணம் என்பது உண்மையா?
பதில்: சிறிலங்கா மீது நடவடிக்கை எடுப்பதற்கான மனோபலத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டிருக்கவில்லை.
இராஜதந்திர வழிகளின் ஊடாக, உயர் அதிகார சக்திகள் ( super powers) சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்தன.
ஆனால் இந்தியா வேண்டுமென்றே தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்தது.
இந்தக் குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது.
சிறிலங்காவில் உள்ள தமிழர்களை காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதாக தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் உணர்கின்றன.
சிறிலங்காவின் வடக்கு,கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடைப்பதற்கான மிகப்பெரிய தடைக்கல்லாக ராஜீவ்காந்தி கொலை அமைந்தது.
கேள்வி (ஈகா) : தமிழீழத்துக்கு ஆதரவான உணர்வு தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால், கொழும்புடன் நல்லுறவைப் பேணியது. எவ்வாறு சமனிலை ஆட்டம் ஆடமுடியும்?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. இந்தியாவுக்கு பல விருப்பத் தெரிவுகள் இருந்தன.
ஆனால் இந்திய அரசியல் தலைமைக்கு மனோபலம் தேவை. சவுத் புளொக் ஒரு நொண்டிவாத்து அல்ல.
பல சந்தர்ப்பங்களில் சிறிலங்கா மீது தடைகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.
அவர்களின் உள்பிரச்சினையில் இந்தியா ஈடுபட்டிருக்கத் தேவையில்லை.
இந்திராகாந்தி செய்தது போன்று துணிச்சலான அணுகுமுறை தான் இப்போது தேவைப்படுகிறது.
ஆனால் துரதிஸ்டவசமாக, 21 நூற்றாண்டில் இருந்த இந்திராகாந்தி போன்ற உயர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை.
கேள்வி (சுப்ரதிக்) :சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா சீரான கொள்கையை பின்பற்றக் கூடாதா? ஒன்றின் அவர்களை ஆதரிக்க வேண்டும் அல்லது முழுமையாக எதிர்க்க வேண்டும். இந்தக் குழப்பமான நிலை வெளிநாட்டுக் கொள்கை மீது தாக்கத்தை செலுத்தாதா?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. இந்தியாவினால் இன்னமும் முக்கிய பங்கை வகிக்கமுடியும்.
ஆனால், புதுடெல்லியில் தற்போதைய அரசாங்கம் இல்லாத சூழலில் தான் அது சாத்தியம்.
இந்திய – சிறிலங்கா உறவு என்பது தமிழ்நாட்டுடன் நேரடியாகத் தொடர்புபட்டது என்பது தான் எனது புரிதல்.
கடந்த 20 ஆண்டுகளில் அதிமுகவும், திமுகவும் தான் பதவியில் இருந்துள்ளன.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஆட்சியில் இருந்துள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் காலத்தில் வைகோவின் மதிமுக அதில் அங்கம் வகித்தது.
வாஜ்பாயின் தேசிய ஜனகநாயகக் கூட்டணி தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படவில்லை.
அப்போது சிறிலங்கா விவகாரத்திலோ தமிழர்கள் விடயத்திலோ பழிவாங்கும் அணுகுமுறை இருக்கவில்லை.
கேள்வி (ராஜ்ரூபா): 30 ஆண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தமிழர்களுக்கு அரசியல்தீர்வு ஒன்றை காண்பதற்கு இந்திய மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பதில்: தமிழ் இனம் முழுமையாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய – சிறிலங்கா விவகாரத்தில் புதிய அணுகுமுறை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னிடம் நகைச்சுவையாக ஒன்றை சொன்னார், அது தான் உண்மை.
“தூங்கிக் கொண்டிருந்ததன் மூலம் அயோத்திப் பிரச்சினைக்கு சாதுரியமாக தீர்வு கண்டார் பி.வி.நரசிம்மராவ், இந்திய – சிறிலங்கா சிக்கலுக்கு தமிழர்கள் கொல்லப்பட்ட வேளை, மன்மோகன்சிங் விழித்திருந்து புத்திசாலித்தனமாக தீர்வு கண்டார்.”