நடேசன், புலித்தேவன் படுகொலைகளை நேரில் பார்த்த புதிய சாட்சிகள் – ‘தி இன்டிபென்டன்ட்’ வெளியிட்டது

Witnesses support claim that Sri Lanka army shot prisoners- Pair back allegations that Tamil Tiger rebel leaders were executed after they had surrendered போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், பா.நடேசன், மற்றும் புலித்தேவன் ஆகியோர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள், அதுகுறித்து சாட்சியமளிக்க முதல்முறையாக முன்வந்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டென்ட்’ நாளேடு தெரிவித்துள்ளது.

பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன், ‘தி இன்டிபென்டென்ட்’ நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பாக விபரங்களை வெளியிட்டுள்ளார்.

சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களை அவர்களின் ஆதரவாளர்களே சுட்டுக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியதை நிராகரிக்கும் வகையில், அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர்.

வெள்ளைக்கொடி சம்பவம் என்று அறியப்பட்ட இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இருவரும், புலிகளின் தலைவர்கள் முன்னரங்கில் இருந்து பாதுகாப்பாக உயிருடன் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்ததை கண்டதாக கூறியுள்ளனர்.

தனது குடும்பத்தினர் சிறிலங்காவில் இருப்பதால், பெயரை வெளியிட விரும்பாத ஒரு சாட்சி, புலிகளின் அரசியல் தலைவர்களின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர்.

போரின் இறுதி மாதத்தில், மோசமாக காயமடைந்த அவர், உயிரைப் பாதுகாக்க சரணடைந்திருந்தார்.

பின்னர் தான் சிறிலங்கா இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவராக மாறியதாகத் தயக்கத்துடன் கூறியுள்ளார்.

தற்போது லண்டனில் உள்ள அவர், 2009 மே 18ம் நாள் சிறிலங்கா இராணுவத்தினரால், தான் முன்னரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறுகிறார்.

வெள்ளைக் கொடியுடன் வரும் புலிகளின் அரசியல் தலைவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதே தனது பணி என்றும் அவர் கூறியுள்ளார்.

மூத்த அதிகாரிகள் அவர்களின் மெய்க்காவலர்களுடன், நூற்றுக்கணக்கான வீரர்கள் சரணடைந்ததைப் பார்க்கும் போது, அது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாகவே தோன்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சாட்சி ஒரு அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்.

தற்போது லண்டனில் உள்ள அவர், போரின் இறுதி மாதங்களில் தான் போராளிகளால் கட்டாயமாக பணிக்குச் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

அந்தச் சம்பவத்துக்கு சில மணிநேரம் முன்னதாக, அவரும் சரணடைந்தார்.

போர் முடிவடைந்து விட்டது தெரிந்த நிலையில், உயிர் தப்புவதற்கு அது ஒன்றே ஒரே வாய்ப்பாக இருந்தது.

சோதனையிடப்பட்ட பின்னர், முன்னரங்கிற்கு அருகே இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றில் தானும் மேலும் சிலரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அங்கிருந்து பார்த்தபோது, தமிழ்ப் புலிகளின் தலைவர்களின் பல குழுக்கள் அவர்களின் உறவினர்களுடன் வெள்ளைக் கொடியேந்தியவாறு போர் வலயத்தில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை நோக்கி வருவதை காணமுடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அவரது சிங்களப் பெண்ணான மனைவி, புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரும் இருந்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏனென்றால், புலிகள் அதிகாரபூர்வமாக சரணடைவதில்லை.

கைது செய்யப்பட்டால், பயன்படுத்துவதற்காக கழுத்தில் அணியும் சயனைட் வில்லைகளை அவர்கள் ஆட்சேர்க்கும் போதே, வழங்குவது வழக்கம்.

சரணடைந்த போராளிகள் பல குழுக்களாக, நீரேரிக்கு மேலாக அமைந்துள்ள பாலத்துக்கு அப்பால் காத்திருந்த வாகனங்களில் ஏற்றுவதற்காக பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டதை தாம் நேரில் கண்டதாக இரண்டு சாட்சிகளுமே, தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மெய்க்காவலர், ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக, இராணுவத்தினரால், அழைத்துச் செல்வதற்காக காத்திருந்த பின்னர், தாம் ஒரு பிக்அப் வண்டியொன்றின் பின்பக்கத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

வீதியோரத்தில் சிறிலங்கா படையினர் நிலத்தில் கிடந்த சடலங்களை தமது கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்ததை தாம் அவதானித்ததாகவும், அவை நடேசன் மற்றும் புலித்தேவனுடையவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட ஒளிப்படங்களில் இரண்டு புலித் தலைவர்களும் அரை நிர்வாணமாக, குண்டுதுளைத்த நிலையில், நெஞ்சில் எரிகாயங்களுடன் சடலமாக கிடந்தனர்.

வெள்ளைக்கொடி சம்பவத்துடன் சுமார் 40 ஏனைய போராளிகளும் தொடர்புபட்டிருந்தனர்.

சிறிலங்கா அரசுடன் இணக்கம் காணப்பட்டதாக நம்பப்படும் அந்த சரணடைவுக்குப் பின்னர், அவர்களில் எவரையும் காணமுடியவில்லை.

புலித்தேவனும், நடேசனும், சரணடைந்த புலிகளில் மிகவும் மூத்த உறுப்பினர்கள்.

சில மணிநேரங்களுக்கு முன்னதாக, தம்மிடம் இருந்த செய்மதி தொலைபேசி மூலம், ஆயுதங்களைக் கீழே போடும் தமது விருப்பத்தை சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்துமாறு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், அமைதி நடுநிலையாளர்களுக்கு, தகவல் அனுப்பியிருந்தனர்.

வெள்ளைக்கொடியுடன் வந்தால், சரணடைதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம், புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர், 2009 மே 18ம் நாள் 58வது டிவிசனால் கொல்லப்பட்டதாக பட்டியலிட்டுள்ளது.

எனினும், புலிகளின் தலைவர்களை அவர்களின் போராளிகளே பின்புறம் இருந்து சுட்டுக்கொன்றதாகவும், சிறிலங்கா இராணுவம் எவரையும் படுகொலை செய்யவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியது“ இவ்வாறு அந்தக் கட்டுரையில் பிரான்செஸ் ஹரிசன் கூறியுள்ளார்.

Witnesses support claim that Sri Lanka army shot prisoners

Pair back allegations that Tamil Tiger rebel leaders were executed after they had surrendered

http://www.independent.co.uk/news/world/asia/witnesses-support-claim-that-sri-lanka-army-shot-prisoners-8508617.html

Leave a Reply

Your email address will not be published.