Search

கொழும்புதான் தமிழ்மண்ணை ஆளுமென்றால்….. – ச.ச.முத்து

தண்ணீரும் அருந்தாமல் திலீபன் என்ற தியாகதீபம் மரணத்தின் அருகில் மிக அருகில் தணலாக உருகி உயிர்மூச்சு குறைந்துகொண்டே வரும்போது, இனிமேல் மீட்கவே முடியாத மரணத்துள் திலீபன் மெதுமெதுவாக அமிழ்ந்துகொண்டே போகின்றான் என்கின்ற நிலையில் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான வானொலி தொலைகாட்சியில் ஒரு கவிதை அடிக்கடி போய்க்கொண்டே இருந்தது.எல்லோருடைய மனச்சாட்சியையும் உலுப்பியபடியே அந்த கவிதை ஒரு கேள்வியாக இருந்தது. இன்றும் இதுவே கேள்வியாக தொடர்கிறது.

‘கொழும்புதான் தமிழ்மண்ணை ஆளுமென்றால் எங்கள்
குழந்தைகள் இதற்காககவா செத்தார்கள்’
என்று அந்த கவிதை வரிகள் இருந்தன.

கொழும்பு என்பது சிங்களபேரினவாதத்தின் மையமான குறியீடு.அது ஒரு நகரம்.மாநகரம் என்பதற்கு அப்பால் பிரித்தானியர் வெளியேறியபின்னர் தமிழினத்துக்கு எதிரான அனைத்து அடக்குமறைச்சட்டங்களில் இருந்து இனஅழிப்பு இனப்படுகொலை திட்டமிடல்வரை சகலதும் கொழும்பிலிருந்தே செயற்படுத்தப்பட்டது.இப்போதும் கொழும்பிலிருந்தே தொடர்ந்தபடியே இருக்கின்றது.ஒற்றைஆட்சியின் அச்சாணியாக கொழும்பே விளங்குகின்றது.கொழும்பின் கொடியகரங்கள் தமிழீழமெங்கும் தனது அடக்குமுறை வலைப்பின்னலை அடர்த்தியாக விரித்து வைத்துள்ளது.தமிழீழமெங்கனும் என்றைக்கு இந்த அடக்குமுறை வலைப்பின்னல்,இந்த இனஅழிப்பு வலைப்பின்னல் சிதைத்து எறியப்படுகின்றதோ அன்றுதான் தமிழீழதேசம் சுதந்திரமாகும்.

இதற்காகவே எண்ணற்ற போராளிகள் தமது இனிமையான இளமையை,வாழ்வை அர்ப்பணித்து போராடி உன்னதமான உயிரையும் ஈகம் செய்தார்கள். 1987ல் தமிழர்களின் நலனுக்காக என்ற பசப்புவார்த்தைகளுடன் இந்தியா சிறீலங்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மீண்டும் தமிழர்களை கொழும்புவின் இனவெறி ஆட்சிக்கு கீழேயே தொடர்ந்துவாழ நிர்ப்பந்திக்கிறது. மீண்டும் கொழும்பின் ஆட்சிக்கு கீழே தமிழர்கள் வாழ்வதற்காகவா இத்தனை ஈகங்களும்,தியாகங்களும்,தற்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன என்ற கேள்வியே அன்று திலீபன் உண்ணாவிரதமேடையில் உயிர்உருகி தணலாக உதிர்ந்துகொண்டிருந்தபோது கவிதையாக வாசிக்கப்பட்டது.

திலீபன் மரணித்து இருபத்திஆறு வருடங்களாகின்றன. அதற்கு பின்னர் எண்ணற்ற அர்ப்பணிப்புகள்.எழுத்திலும் பேச்சிலும் வடித்துவிட முடியாத வீரம்நிறைந்த தியாக வேள்விகள். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகள். முழுமையான தமிழீழம் என்றில்லாதுவிட்டாலும் மூன்றில்இரண்டு பங்கு நிலப்பகுதியை சுதந்திரமாக நிர்வகித்து ஒரு அரசாகவே பலஆண்டுகள் நிலைநாட்டப்பட்து. இத்தனைக்கு பிறகும் இப்போதும் சில ஊளைக்குரல்கள் ‘ஐக்கியஇலங்கைக்குள்’…’ஒன்றுபட்டதேசத்துக்குள் தீர்வு’ ‘பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு’ போன்ற சொற்களை அறிக்கைகளுக்குள்ளும் பேட்டிகளுக்குள்ளும் மிகவும் சக்சிதமாக இணைத்து வருகிறார்கள்.

ஒற்றை ஆட்சிக்குள் எந்தவொரு தீர்வும் வரைபும் நிரந்தரமே இல்லை.அடுத்துவருகின்ற ஆட்சி அதனை தட்டிப்பறிக்கும்.அல்லது நீதிமன்றதீர்ப்புகள்மூலம் அவை முடக்கப்பட்டு அழிக்கப்படும். திரும்பதிரும்ப கொழும்பை மையமாக கொண்ட மத்தியஆட்சிக்குள்ளேயே தமிழர்கள் ஆளப்படவேண்டும் என்ற எண்ணம் சிங்களஇனத்திடம் வேரூன்றி இருப்பது ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. ஆனால் அதுவே தமிழர்கள் சிலரிடம் ஆழமாக தோன்றி இருப்பது பெரும்சினத்தை வரவழைக்கிறது. இது திலீபனின் இருபத்திஆறாவது நினைவுவருடம். திலீபனும் அரசியல்தான் செய்தான்.இவர்களும் அரசியல்தான் செய்கிறார்கள். திலீபன் செய்தது மக்களின் எண்ணங்களை அரசியல்சக்தியாக வெளிப்படுத்தும் மக்கள்அரசியல். மக்களின் நல்வாழ்வுக்கான அரசியல் அவனது.மக்களின் நல்வாழ்வுக்கு அத்திவாரமாக அமையும் சுதந்திரத்துக்கான அரசியல் அவனது.அந்த அரசியலுக்காக அவன் தன்னையே மெதுமெதுவாக அழித்துக் கொண்டு போராடினான்.

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதையே கொடும்வெயில் நிறைந்த பொழுதில் தண்ணீரும் அருந்தாத உண்ணாவிரதத்தின்போது திலீபன் தன்னை ஈகம் செய்த வண்ணமே நிலைநாட்டினான். இன்றைவரைக்கும் தமிழீழவரலாற்றிலேயே மூன்றுமுறை மட்டுமே தனிமனிதன் ஒருவனுக்காக லட்சோபலட்சம் மக்கள் மேடையின் முன் கூடிய நிகழ்வு நடந்துள்ளது. கிட்டு கைக்குண்டு தாக்குதல்ஒன்றில் மயிரிழையில் உயிர்தப்பி கால்களை இழந்து கலந்துகொண்ட முதலாவது பொதுக்கூட்டம்(மேதின நிகழ்வு) அடுத்து திலீபன் உண்ணாவிரத நிகழ்வு
மூன்றாவது தேசியதலைவர் சுதுமலையில் முதன்முதலில் அறிவிப்புடன் தோன்றிய நிகழ்வு திலீபனின் உண்ணாவிரதமேடையும் அதன் முன்னால் ஒவ்வொருநாளும்கூடிய மக்களும் கொழும்புதான் எங்களை ஆளவேண்டும் என்ற ஒப்பந்தகருத்துக்கு எதிராகவே திரண்டார்கள்.
இதோ இருபத்திஆறுவருடங்களுக்கு பின்னர் இப்போதும் அதே கருத்தே இன்னும்வலுவானதாக தேர்தலிலும் ஆணையாக இடப்பட்டுள்ளது.
கொழும்பை மத்தியமையமாக கொண்ட சிங்களகட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட இந்தியமேலாதிக்கத்தினதும் சிங்களபேரினவாதத்தினதும் கருத்துக்களை தமிழ்தேசிய கருத்துகள் என்ற இனிப்புபோர்வைக்குள் வழங்கும் அரசியல்வாதிகள் சிலர் ஏன்தான் திரும்ப திரும்ப ‘உள்ளகசுயநிர்ணயம்’,’ஐக்கியஇலங்கை”பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு’ என்ற மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள்.

தமிழீழம் என்று சொல்வதும் பிரிவினை என்று சட்டவிரோதம் என்றால் அதற்காக ‘ஐக்கியஇலங்கை’ என்ற வாக்கியத்தை அடிக்கடி அழுத்தி உச்சரிக்கவேண்டும் என்பது அல்ல. 6வது திருத்தசட்டம் பிரிவினையை சட்டவிரோதம் என்று சொல்கிறதே தவிர தூக்கத்திலும் விழிப்பிலும் எந்தநேரமும் ‘ஐக்கியஇலங்கையை’ பாராயணம் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை.ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளப்படவேண்டும். ஈழத்தமிழர்களின் இறைமை என்பது நெடிய பரிணாமங்களை கொண்டது.பாராளுமன்ற அரசியல்,வாக்கு அரசியலில்கூட அது வெறுமனே எடுத்தவுடன் வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல.

எல்லாவிதமான சேர்ந்து வாழ்வதற்கான முறைமை கலந்த கோரிக்கைகளும் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னரே சுயநிர்ணயஉரிமை என்ற எமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் அரசியல்கோரிக்கை வரலாற்றின் ஓட்டத்தில் எழுந்தது. இவ்வளவு அர்ப்பணிப்புகள், அழிவுகள்,இழப்புகள் எல்லாவற்றின் பின்பும் மீண்டும் பழைய இத்துப்போன கோரிக்கைகளையே புதிய வார்த்தைகளில் முன்வைப்பது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். எங்களிடம் இருந்த எல்லாவற்றையுமே நாம் இழந்திருக்கலாம்.சிங்களதேசத்துடனான பலச் சமநிலையை பேணும் கருவிகளை,அதற்கான ஆளணிகளை இழந்திருக்கின்றோம்.உண்மைதான். சிங்களதேசம் ஆயுதங்கள்மூலம்,பலத்தின்மூலம் நிகழ்த்தும் அடக்குமுறைகளை எதிர்த்ப்பதற்கான அனைத்து வழிகளையும் தற்காலிகமாக இழந்திருக்கலாம். ஆனால் எமது இறைமை, எமது மண்ணை நாமே ஆளுவதற்காக எமக்கிருக்கும் தார்மீகஉரிமை எவரிடமும் எப்போதும் சரணாகதி ஆக்கப்படவில்லை.

அதனை வலுக்குன்றச் செய்வதற்கான செயற்பாடுகளைதான் இந்தியாவும் சிங்களமும் இப்போது செய்துகொண்டிருக்கின்றன.
அர்ப்பணிப்புகளினூடாக தக்கவைக்கப்பட்ட எமது இறைமையை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை என்பதே எமது உறுதியாக என்றும் இருக்கட்டும்.அதுவே தமிழ்மக்களின் உயிர்நாடியும் ஆகும். திலீபன் உயிர்உருகிக் கொண்டிருந்த அந்த வேளையில் வானலைகளில் காற்றில் வந்த அந்த கவிதை எங்கள் எல்லோரையும் எப்போதும் கேட்பதுபோலவே இருக்கின்றது.

“கொழும்புதான் தமிழ்மண்ணை ஆளுமென்றால்
நம் குழந்தைகள் இதற்காகவா செத்தார்கள்.”

– ச.ச.முத்து –




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *