எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
த.தே.கூ. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும்கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ்பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனிதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் ஏனைய பிஜைகளையும் சரியாக வழிநடத்ததும் பொறுப்பு உள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகமும் சட்டமும் ஒழுங்கும் முன்னொருபோதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன.
இதனால் பாரதூரமான விளைவுகள் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளன. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன்கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார்.
அத்தோடு தான் நினைத்தபடி சட்டதிருத்தங்களை மேற்கொண்டு 3 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கை தெளிவாகக் காட்டுகின்றது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மேன் முறையீட்டு நீதிமன்றமும் சதந்திரமாக செயற்படமுடியாத அவலநிலையேற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டதிருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே கோடிட்டுக் காட்டுகின்றன.
த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் 18ஆவது சட்டதிருத்தத்திற்கு எதிராகவும் பிரதான நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததையிட்டு பெருமை கொள்கின்றது.
அன்று 18ஆவது சட்டதிருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து தவறுசெய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக்கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.
ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து மூன்றிலிரண்டு பொரும்பான்மை பலத்தைப்பெற்று அதனைப்பயன்படுத்தி நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பில் சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைப்பொம்மையாக மாறியுள்ளதென அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் த.தே.கூ.வின் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர் மாவைசேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்திஆனந்தன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்