தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! –

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! –

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

தமிழீழ தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த கணம் முதல் ஆயுதப்போர் ஓய்வுநிலைக்கு சென்றிருந்தாலும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் இன்றுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை என்பதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவில்லை. இராணுவ முற்றுகைக்குள் தமிழர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதே சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் மாறா நிலைப்பாடாக இருந்துவருகிறது.

ஆயுத முனையில் தமிழர்களை அடக்கியாளும் எதேச்சதிகாரப்போக்கின் வெளிப்பாடான இராணுவ இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற நாடக ஆயுத மீட்பு நிகழ்வுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அதன் நீட்சியாகவே சாவகச்சேரி சம்பவமும் அமைந்துள்ளது.

சாகவச்சேரி ஆயுத மீட்பு குறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்த மறு நொடியே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலவை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய சதி என்ற ரீதியில் செய்திகள் வெளிவந்ததன் மூலம் அனைத்துலக கவனத்திற்கு இந்த ஆயுத மீட்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். இதன் மூலம் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடையங்களில் அனைத்துலக அளவில் கொடுக்கப்பட்டுவரும் நெருக்கடிகளை தட்டிக்கழிப்பதே அவர்களின் நோக்கமாகும்.

தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளுடன் விமானத்தை கடத்தும் நிகழ்வு நடந்தேறும் சமநேரத்தில், தமிழர்களின் வரலாற்றில் ஆழமான வடுவாகப் பதியம்பெற்றுவிட்ட தமிழினப்படுகொலைக்கான நீதியை அறவழியில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நாம் இன்றுவரை உளப்பூர்வமான பற்றுறுதியுடனேயே பங்கேற்றுவருகின்றோம்.

மாபெரும் இன அழிப்பு கொடூரம் எம்மீது திணிக்கப்பட்டதுடன் அதற்கான நீதியும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவரும் நிலையிலும் கூட அமைதிவழிமுறையில் நாம் கடைப்பிடித்துவரும் பற்றுறுதியை பலவீனமாக கருதாது எமக்கான நீதியை உறுதிப்படுத்துமாறு நாம் இத்தருணத்தில் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.