கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி எழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் 08.06.2026 காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில்   சங்கீத்தை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்கக் கோரியும், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்வோம் என நேற்றையதினம் ஏற்பாட்டாளர்களை வல்வெட்டித்துறைப் பொலிஸார் கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கிய நிலையிலும் மேற்படி போராட்டம் எழுச்சியுடன் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ்,    வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அரசியல், சிவில் சமூக தரப்பினர் பாடகர் சங்கீத் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.