தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமிற்குள் சென்று திரும்பிய தருணத்தில் இவ்வாறுதான் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
மாரடைப்பு காரணமாக சாவடைந்த உறவினரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக சில நூறு கிலோ மீட்டரிற்கு அதிகமான தொலைவு கடந்து மண்டபம் முகாம் நுழைவாயிலை அடைந்தோம்.
நுழைவாயிலின் ஒருபுறம் பொதுக் காவலாளி. மறுபுறம் ஆயுதம் தாங்கிய காவலர். பொதுக்காவலாளி இருந்த இடத்திற்கு சென்று வந்த காரணத்தைக் கூறி உள்ளே செல்ல வேண்டும் என்பதனைத் தெரிவித்தேன்.
வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என முனுமுனுத்தவர் கைபேசியில் யாருக்கோ அழைப்பெடுத்து பேசினார். கலக்டர் அம்மா வரட்டாம்.. என சலிப்புடன் கூறியவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வழிகாட்டினார்.
அவர் குறிப்பிட்ட கட்டடத்தொகுதிக்குள் சென்றேன். ஒரு அம்மா இருந்த தோரணை அவரைத்தான் பார்கவேண்டும் என்று என் உள்ளுணர்வு கிசுகிசுத்தது.
வணக்கம் அம்மா… என்ற விளிப்புடன் வந்த காரணத்தை கூறி நின்றேன். அவர் ஏதோ பணியில் மூழ்கியவாறே எனது விடையத்தை அணுகினார். அவர்களில் யாராவது வந்து அழைத்துச் செல்வார்களா என்று முன்னைய பணியில்(!) இருந்து விடுபடாதவாறே கேள்வியெழுப்பினார்.
சுறுக்கென உச்சந்தலையில் ஏறிய கோபத்தை அடக்கியவாறு (வேறு என்ன செய்ய முடியும்..? அதாங்க நாங்கள் சிலோன் காரங்களாச்சே) இந்த நிலையில் எப்படி அவர்களால் வரமுடியும் என்று தாழ்மையுடன் கூறினேன்.
எதிர் முனையில் இருந்து பதிலில்லை. மீண்டும் நானே ஆரம்பித்தேன். வேண்டுமென்றால் கைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தவா எனக் கேட்டேன். அரைகுறையான தலையசைப்பே பதிலாக கிடைத்தது.
இருந்தும் அவரின் பதிலுக்கு காத்திராது கைபேசியில் அழைப்பெடுத்து நாங்கள் வந்திட்டம்.. வாசலில் நிக்கிறம்.. நீங்கள் ஒருக்கா அவர்களிடம் சொல்லிவிடுங்கோ… என நான் சொன்ன போது எதிர் முனையில் தேம்பல் ஒலிதான் கேட்டது. கைபேசியை கலக்டர் அம்மாவிடம் நீட்டினேன்.. அவர் வாங்க மறுத்து அருகே நின்ற ஒருவரிடம் வாங்கி பேசுமாறு உத்தரவிட்டார்.
ஏம்மா.. நான் Ro ….. பேசிறன்.. யாரும்மா நீ…? உன் பேரு என்னமா…? வந்திருக்கிறவங்க சொந்தக்காரங்களா…? என அதட்டல் தொனியில் அவர் பேசியது எனது பொறுமையை சோதித்தது. உடனே கலக்டர் அம்மா… யோவ் என்னய்யா நீ.. அவங்க இறந்தவரோட மனைவி… அவங்ககிட்டபோய் இப்படிதான் பேசுவியா…? என கடிந்துகொண்டார். இவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களா…? என்ற கேள்வி விடைகாண முடியாது என் உள்ளே தொக்கிநின்றது.
எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்…? வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை…. சரி செல்லுங்கள்… என்று கலெக்டர் அம்மா(!) அனுமதி வழங்கினார்.
மீண்டும் முகாம் நுழைவாயிலிற்கு வந்தபோது என்னை அனுப்பிய பொதுக்காவலாளி எனது பயணப்பாதையை உறுதிப்படுத்தியவாறு நின்றிருந்தார். போகச்சொன்னார்கள் என்று அவரிடம் கூறியபின்னர் கதவினை திறந்து உள்ளே செல்ல வழிவிட்டார்.
நாங்கள் உள்ளே சென்று அரை மணிநேரம் இருக்கும்… கியூ பிரிவைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து நோட்டமிட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
மண்டபம் முகாமில் ஏதாவது விசேட நிகழ்வுகள் நடைபெறும் போது அந்நிகழ்விற்குரியவர்கள் நிகழ்வு குறித்த தகவலை சொல்லி வெளியில் இருந்து இத்தனைபேர் வருவார்கள் அவர்களை அனுமதிக்குமாறு வேண்டுகை கடிதம் ஒன்றை மனுவாக முகாம் பொறுப்பு கலெக்டர்(தனித்துணை ஆட்சியர்) அலுவலகத்தில் முன் கூட்டியே கொடுக்க வேண்டுமென்பது நடைமுறையில் உள்ளதாம்.
அது சரி, சுப நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே அனுமதி கோருவது ஏற்புடையதாயினும் மரண நிகழ்வின் போதும் இவ்நடைமுறையை இறுக்கமாக பேணுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
அறிவிப்பு!
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தங்கியுள்ள மண்டபம் முகாம் பாதுகாக்கப்பட்ட பகுதி. இதற்குள் அலுவல் மற்றும் குடியிருப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர யாரும் மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியாளர் அனுமதி இன்றி உட்பிரவேசிக்கக் கூடாது. அத்துமீறி பிரவேசிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
-தனித்துணை ஆட்சியர்
(மா.வ) மண்டபம் முகாம்.
முகாம் நுழைவாயில் உள்ள இந்த அறிவிப்பே ஈழத்தவர்கள் எவ்வாறான அடக்குமுறைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி.
சிங்கள இராணுவத்தின் முள்வேலிகளைவிட மண்டபம் முகாம் நெருக்குவாரங்கள் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
வாய்கிழிய தொப்புள்கொடி உறவென்று கூப்பாடு போடுபவர்கள் ஈழத்தமிழர்களை எந்தளவில் நடத்துகிறார்கள் என்பதற்கான ஒரு சோற்று பதமாகவே இன்நிகழ்வு அமைந்துள்ளது.
எங்கள் இனத்தை மொத்தமாக அழித்த மகிந்தனையும், மைத்திரியையும், ரணிலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பவர்கள் எங்களை சாதாரண மனிதர்களாக மதித்தாலே போதும்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
ம.செந்தமிழ்.
mythrn@yahoo.com