வல்வை இளைஞர்களின் களம்-1 வல்வை மதன் எழுதிய விமர்சனக் கட்டுரை
வல்வெட்டித்துறை இளைஞர்கள் எதில் சளைத்தவர்கள் என்ற வகையில் இக்கட்டுரை அமைந்து வல்வை மதனின் எழுத்தாற்றல் விளியங்களை விளக்கி நிற்கின்றது அவர் மேலும் மேலும் இதே போன்ற சிறந்த பல்துறைப்பட்ட கட்டுரைகளை எழுத வேண்டும் என்றே எமது வல்வை மக்களாகி நாங்கள் வேண்டுகின்றோம் இவரினுடைய மொழி நடை விளையாட்டு ஆர்வம் ஒற்றுமை தன்மை உள்மனதில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன அக்கட்டுரையை உங்களுக்காக தருகின்றோம்
கடந்து மார்ச் மாதம் 08ம் திகதி வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய “Northern challengers-2016” தொடரில் சம்பியன்களாக முடிசூடிய யங்கென்றிஸ் அணி பற்றி அதற்கு மறுநாள்(09-02-17) எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை..
தொடரும் யங்கென்றிசின் ஆதிக்கம்; ஞானமுருகனை வீழ்த்தி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது..
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய “Northern challengers-2016” தொடரின் நேற்றய இறுதிப்போட்டியில், மயிலங்காடு ஞானமுருகன் வி.க தை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது இளவாளை யங்கென்றிஸ்.
அரையிறுதியில் யங்கென்றிஸ், பாடும்மீன் வி.கவையும், ஞானமுருகன் வி.க சென்ஜோசப்வாஸ்நகர் வி.கவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இரு அணிகளும் நேற்று மோதிக்கொண்டன.
வேகமான மற்றும் நுனுக்கமான ஆட்டத்தினை வெளிப்படுத்திவரும் யங்கென்றிஸ் எதிர் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர்போன ஞானமுருகன் அணிக்கு எதிரான ஆட்டம் என்ற காரணத்தினால் அரங்கமே நிம்பிவழிந்தது. அதற்கு ஏற்றது போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரு அணிகளும் பூர்த்தி செய்யும் முகமாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
முதற்பாதியாட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் கோல்போடும் சந்தர்ப்பங்கள் எவையும் அமையவில்லை. இரு அணியினருக்கு கிடைத்த கோல்போடுவதற்கான வாய்ப்புக்களை பயன்படத்த தவறினார்கள் என்பதை விட, இரு அணிகளின் கோல்காப்பாளர்களின் சிறப்பான தடுப்பின் காரணமாக அடிக்க முடியவில்லை என்றே கூறலாம்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும், முதற்பாதியாட்டத்தை விட மேலும் மூர்க்கமாக மோதிக்கொண்ட போதிலும் எவ்வித கோலினையும் அடிக்க முடியவில்லை. போட்டி முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் தேசியவீரன் மதுசன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கோலினை போட யங்கென்றிஸ் அணி 1:0 என முன்னிலை வகித்தது. பதிலுக்கு கோல்போடுவதற்கு ஞானமுருகன் மேற்கொண்ட முயற்சிகளும் பயனலிக்கவில்லை.
போட்டி முடிவுறும் தறுவாயில் யங்கென்றிஸ் அணியின் நட்சத்திரவீரன் தனேஷ் அதிரடியாக சில பந்துகளை கோல்கம்பத்தை நோக்கி உதைத்து ரசிகள்களை பரவசப்படுத்தினார். இறுதியில் 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்று இந்த வருடத்தின் இரண்டாவது வடமாகாண ரீதியிலான கிண்ணத்தினையும் கைப்பற்றியது யங்கென்றிஸ்.
யங்கென்றியரசர் பற்றி சில விடயங்களை கண்டிப்பாக குறிப்பிட்டேயாக வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், யங்கென்றிஸ் அணியினை கண்டு கதிகலங்கிய அணிகள் ஏராலம். காரணம் ஞானம் மற்றும் சதீஷ்(கொசு) கூட்டனி. ஆம் பின்வரிசையில் விளையாடும் சதீஷ், கன நேரத்தில் எதிரனியின் வியூகங்களை ஊடறுத்துச்சென்று ஞானத்திடம் லாபகமாக பந்தை வழங்க, அதை ஞானம் அழகாவும் அதிரடியாகவும் எதிரனியின் கோல்கம்பங்களுக்குள் தள்ளும் அழகை ரசிப்பதற்கென்றே ஒரு பெரும் கூட்டம் யங்கென்றிசின் போட்டிகளில் கூடிவிடும்.
கென்றிசின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த இந்த கூட்டனி, ஓர் விபத்தின் காரணமாக சதீஸ் (கொசு) விளையாடமுடியாத நிலைக்குச்செல்ல முறிந்தது. இது நடந்து சில வருடங்களை கடந்தாலும், இன்று பல புதிய கூட்டனிகள் சாதித்தாலும் கூட ஞானம் கொசு கூட்டனிக்கு நிகராக எந்த ஓர் கூட்டனியையும் காணமுடியவில்லை. இனியும் காண முடியுமா என்பதும் சந்தேகம் தான்.
கொசுவின் இழப்பிற்கு பிற்பாடு கென்றிஸ் அணி ஒட்டுமொத்தமாக ஞானம் எனும் வீரனிலேயே தங்கிருந்து. அக்காலப்பகுதியில் தொடர்ந்து காலுறுதிகள், அரையிறுதிகள் என்று முன்னேறினாலும் கிண்ணம் வெல்லுமளவிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் அன்றைய தோல்விகள் பற்றி சிந்திக்காது, எதிர்காலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இளம் வீரர்களை அணிக்கு உள்வாங்கி, அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து, போட்டிகளில் அவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டி இன்று அவர்களில் சிலரை தேசிய அணிக்கு விளையாடும் அளவிற்கு வளர்த்துவிட்ட பெருமை ஞானம் மற்றும் பயிற்சியாளர் டெனீஸ்வரனையே சாரும்.
அன்று ஞானம் எனும் ஒரு வீரனை மட்டுமே நம்பியிருந்த யங்கென்றிஸ், இன்று அவர் பங்குபற்ற முடியாத சூழ்நிலையில் கூட (உபாதை காரணமாக) இரண்டு வடமாகாண ரீதியிலான கிண்ணங்களை சுவீகரிக்குமளவிற்கு வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு வீரர்களின் பின்னால் இருக்கும் கடினஉழைப்பையும், உதைபந்து மீதான தீராத காதலுமே முதற்காரணமாகும்
அன்றைய நாட்களில் ஞானரூபனை சந்திக்கும் வாய்ப்புக்களில், அணியின் அன்றைய நிலை குறித்து பேசும் சந்தர்ப்பங்களில் அவர் கூறும் ஓர் வார்த்தை “இந்த தோல்விகள் பற்றி யோசிக்க கூடாது. இது எல்லாம் சின்ன விடயம். எமது பிரதேசத்தில் அடிமட்ட உதைபந்தாட்ட பயிற்சிகள் (Gress Root Football) சரியாக இல்லை. ஆனால் பாடசாலை மட்டத்தில் சில கல்லூரிகள் சிறப்பாக இதை முன்னெடுக்கின்றது. அதில் எங்கள் கென்றியரசர் கல்லூரியும் ஒன்று. எமது கல்லூரி மட்டுமின்றி எமது இளம் வீரர்களும் எதிர்காலத்தில் எமது பிரதேச உதைபந்தாட்ட முன்னேற்றத்தில் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதே நோக்மே தவிர இன்றைய இந்த சிறு வெற்றிகள் எமது நோக்கமல்ல. நீ இருந்து பார் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் யாழ்ப்பாணத்தின்ட சகல அணிகளையும் வீழ்த்தக்கூடிய நிலையில இவங்கள் வருவாங்கள். இதில ஒருத்தனாவது தேசிய அணிக்கு தெரிவாவான். இரண்டு மூன்று பேர் போற சந்தர்ப்பமும் இருக்கு” என்று கூறுவார்.
ஆனால் இன்று யங்கென்றிஸ் அணி மாகாணத்தின் முதன்மை அணிகளில் ஒன்றாக காணப்படுகிறது. அணியின் நான்கு வீரர்கள் தமது சர்வதேச அறிமுகத்தினை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமான திறனை தன்னகத்தே கொண்டுள்ள இந்த இளம்படையின் ஆட்டதை பார்க்கவே பல ரசிகர்கள் வெளிப்பிரதேசத்தில் இருந்து படையெடுக்கிறார்கள். 2015ம் ஆண்டிலிருந்து தன் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக நிலை நாட்ட ஆரம்பித்த யங்கென்றிஸ் அணிக்கு இந்த ஆண்டு ஓர் கனவு ஆண்டாக ஆரம்பித்துள்ளது. 2017ம் ஆன்டு ஆரம்பித்து, வெறும் 67 நாட்களே கடந்துள்ள நிலையில், இரண்டு மாகாணமட்ட கிண்ணங்கள் உற்பட நான்கு கிண்ணங்களை வென்று வீறுநடை போடுகிறது.
இவர்களின் வெற்றிகளை கடந்து, யங்கென்றிசின் இந்த எழுச்சியால் பயனடைவது எம் மாவட்டத்தின் உதைபந்தாட்டமே. ஆம் யங்கென்றிஸ் அணியின் இந்த எழுச்சியினால், எம் மாவட்டத்தின் மற்றய அணிகளுக்கும் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகம் வரும். இவர்களை வீழ்த்த வேண்டுமானால் இவர்களுக்கு நிகரான ஆட்டத்தை எதிரனியினர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு எதிரனி இவர்களுக்கு நிகரான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் போது அவர்களின் ஆட்டம் அடுத்த பரிமாணத்தை நோக்கி சொல்லும். போட்டிகளும் ஆரோக்கியகரமானதாக இருக்கும். இவ்வாறு ஆரோக்கியகரமான போட்டிகள் நடைபெறுவது எம் மாவட்டத்தின் உதைபந்தாட்டத்துக்கே கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு யாழ் உதைபந்தாட்டம் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் போட்டியில் குழப்பநிலைகள் மற்றும் மோதல் போக்குகள் வருந்தத்தக்க விடயமாக காணப்படுகின்றது. எது எவ்வாறு எனினும் எமது மாவட்ட உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்கும் வகையில் எதிர்கால செயல்பாடுகளை உதைபந்தாட்டதுறை சார்ந்த லீக்குகள், பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தீர்க்கமான தீர்மானங்களை எடுத்து எதிர்கால உதைபந்தாட்டம் சிறக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களாகிய எங்களது விருப்பமாகும். குறிப்பாக போட்டித்தொடரை நடாத்த அனுமதி வழங்கும் லீக்குகள் போட்டிக்காலம் நேரமுகாமை, பங்கெடுக்கும் கழகத்திற்கான உரிய அறிவுத்தல்கள் மற்றும் கழக வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு என்பவற்றில் தனிப்பட்ட முறையில் கூடிய அக்கறை செலுத்துவது சிறப்பாகும்.