வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் கடற்கரையோரங்களை துப்பரவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் திண்மக்கழிவகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பொலிகண்டி முதல் தொண்டைமனாறு வரையான கடற்கரையோரங்களை துப்பரவாக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வடமராட்சி நல்லொழுக்க கழகத்தின் அனுசரணையுடன் நகராட்சி மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் மூன்றாவது நிகழ்வு, எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ள பட்டப்போட்டியை முன்னிட்டு விசேடமாக ஒழுங்குசெய்யப்பட்டு மீனாட்சியம்மன் ஆலயத்திற்கருகாமையிலுள்ள கடற்கரையில் 11.01.2019 காலை 8:30 மணிக்கு நகராட்சி மன்ற கௌரவ தவிசாளர் திரு.கே.கருணானந்தராசா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி மன்ற உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வல்வை சிவகுரு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நகராட்சி மன்ற ஊழியர்கள், வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினர் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலர் பங்குபற்றியிருந்தனர்.
முன்னதாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் அவை கடலுக்குள் வீசப்படுவதனால் ஏற்படக்கூடிய அபாயம் தொடர்பாகவும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டு அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து ரேவடி தொடக்கம் வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் வரையான கடற்கரையோரத்தை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு நகராட்சி மன்றத்தினால் வெளியகற்றப்பட்டது.
