ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழி ஒன்று உண்டு. அதுதான் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்ற மொழி. ஆனால் வெறுமனே ஒரு விடுதலை அமைப்பு என்ற கடித இலட்சினை மட்டுமே ஒரு விடுதலை இயக்கத்துக்கு நெருக்கமாக மற்றைய விடுதலை அமைப்புகள் வருவதற்கு போதுமானவை அல்ல.
தமிழ் புதிய புலிகள் இயக்கத்தையும் அதன் வரலாற்றுப் பாதையில் பெயர் மாற்றம்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஆரம்பித்த தேசியத் தலைவர் இதனை நன்கு புரிந்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்து புதிய போராளிகளை உள்வாங்கிய அந்தத் தருணங்களில் தேசியத் தலைவர் தனது தெரிவுகளாக ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு பண்ணையிலும் இருக்கவேண்டிய புத்தகங்களாக விடுதலைப் போராட்ட வரலாற்று புத்தகங்களையே அதிகமாக வாங்கிக் கொடுத்திருந்ததார்.
இந்த உணர்வு வெறுமனே உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்வது என்பதற்கு அப்பால் அவர்களுடன் மானசீகமாக ஒன்றிணைவது என்பதுதான்.
ஆரம்பகால விடுதலைப் புலிகளின் இருப்பிடங்கள், பண்ணைகளில் அயர்லாந்து விடுதலைக்கான ஆரம்ப போராளிகளான தான்பிரின், மைக்கல் கொலின்ஸ் போன்றோரின் வரலாறுகள், தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் நவரெட்ணம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட யூதமக்களின் தாயகப் பயண ஆக்கமான ‘நமக்கென்றோர் மண்’ (எக்சோடஸ்), வீரமிகு வியட்னாம் என்ற வியட்னாமியரின் விடுதலை வரலாறு, சுபாஸ் சந்திரபோசின் வரலாறு என்பன நிச்சயமாக இருந்திருக்கின்றன.
விடுதலைப் புலிகள் மற்றைய விடுதலை இயக்கங்களை உற்றுக்கவனித்து அவற்றின் எழுச்சி, வீழ்ச்சி என்பனவற்றை கற்றுக்கொண்டிருந்ததைபோலவே மற்றைய உலகத்து போராட்ட அமைப்புகளும் தமிழர் தாயகத்தில் ஏதோ ஒரு ஆயுத எதிர்வினை தோன்றி இருந்ததை தெரிந்திருந்தனர் அந்த 70களின் இறுதியில்.
சிங்களதேசத்து ஆளும் கட்சியின் தமிழர் பிரதேச பொறுப்பாளர்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டதும், சிங்கள அரசபடைகளின் தமிழர் பகுதி மீதான வலையமைப்பு சிதைக்கப்பட்டு அதன் காவல்துறை அதிகாரிகள் அழிக்கப்படுவதும் எல்லோருக்கும் செய்திகளாக இருந்தபோதும், உலகின் விடுதலை அமைப்புகளுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் அவை வேறுவிதமான சேதிகளாகவும் இன்னொரு தேசத்தின் பிறப்புக்காக யாரோ ஒரு அமைப்பினர் சாகவும் துணிந்து போராடுகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தியது.