இலங்கையில் அல்குவைதா கிளை – அமெரிக்க ஊடகங்கள்!

அல்குவைதா இயக்கத்தின் கிளை ஒன்று இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கிளை மூலம் அல்குவைதாவின் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அல்குவைதா உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலும், பங்களாதேஷிலும் உள்ள கிளைகளைப் பயன்படுத்தி அல்குவைதா உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர் எனவும் அவை கூறியுள்ளன.
வொஷிங்டனில் இயங்கிவரும் சுதந்திர செய்தி வலையமைப்பான டபிள்யூ. என்.டி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பொஸ்ரனில் கடந்த செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் செயற்பட்டுள்ளதென்றும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களின் “குட்ஸ்’ படையினருக்கு ஹிஸ்புல்லா மற்றும் அல்குவைதா    பிரிவுகளுடனும் தொடர்புகள் இருப்பதுடன் அவற்றுக்கு இலங்கையிலும் பங்களாதேஷிலும் தனிநபர்களுடன் தொடர்பு உண்டு என்பதும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியின் படி “குட்ஸ்’ படை அணியின் ஆதரவில் இலங்கையிலும் பங்களாதேஷிலும் உள்ள அல்குவைதா அமைப்புடன் தொடர்புள்ள சன்னி பயங்கரவாதிகளை ஹிஸ்புல்லா இணைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பின்னர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் இறங்குவதற்காக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்கள் என்றும் பொஸ்ரன் குண்டுத் தாக்குதலில் பயன்பட்டதாகக் கருதப்படும் “பிரஷர் குக்கர்’ குண்டுகளைத் தயாரிப்பதற்கான செயல்முறைகள் அல்குவைதா சஞ்சிகையில் மிகவிவரமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து 5 மாலைதீவு வாசிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அல்குவைதாவுடன் தொடர்புடையவர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின.
ஆனால் அல்குவைதா மையங்கள் ஏதும் இலங்கையில் இல்லை, பயிற்சிகள் ஏதும் நடைபெறவில்லை என்று இலங்கை அரசு அப்போது மறுத்திருந்தது. 2001 ஆம் ஆண்டு “ரைம்ஸ் ஒப் இன்டியா’ பத்திரிகை வெளியிட்ட ஓர் செய்தியில் அல்குவைதாவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இஸ்லாமிய அமைப்பொன்று சமய சார்பற்ற இன்னொரு அமைப்புடன் தொடர்புகொண்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *