வல்வையிலே நான்கு பாடசாலைகள் இருந்தாலும் பெண்பிள்ளைகளுக்கு தனியான பாடசாலை இருக்க வேண்டும். என்று சில பெரியார்கள் விரும்பினார்கள். நெடியக்கட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயிலுக்கும் இடுகாட்டிற்கும் இடையில் உள்ள துரை வாத்தியாருக்கு சொந்தமான காணியை பட்டினசபை விலைக்கு வாங்கி இருந்தது. அதில் நகரசபைக்கு சொந்தமாக நிர்வாக கட்டிடம் கட்ட மக்கள் அனுமதி கேட்க அம்மன் கோயில் வீதியில் நகரசபைத் தலைவர் திரு மு. இரத்தினவடிவேல் தலைமையில் கூட்டம் கூடிய போது ஒரு சாரார் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் திரு க. துரைரெத்தினம் அதை கல்வி இலாகாவிற்கு மாற்றி அதில் தெற்கு திசையில் ஒரு மண்டபத்தை அரச செலவில் கட்ட உதவி புரிந்ததும், அதற்கு சமாந்திரமாக வடக்கு திசையில் திரு செ.யோககுரு, செ.மௌனகுரு இருவரும் சேர்ந்து ஒரு மண்டபத்தை தமது தாயார் நினைவாக கட்டி முடித்தார்கள். அதில் அதிபர் காரியாலயமும் கட்டி முடித்தார்கள். அதன் திறப்புவிழா 1972ம் ஆண்டு தை மாதம் வெகு சிறப்பாக நடந்தேறியது
வல்வையைச் சேர்ந்த திருமதி கோ. அரியரத்தினம் (பி.ஏ. லண்டன்) முதல் தலைமையாசிரியையாகவும், 334 பிள்ளைகளையும் மூன்று தொண்டர் ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் இப்பாடசாலை அதிக வளர்ச்சி அடைந்து திருமதி அரியரத்தினம் மாற்றம் பெற்று வேறு பாடசாலைக்கு செல்ல உடுப்பிட்டியைச் சேர்ந்த திருமதி எம். இராஜரத்தினம் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
வல்வை வர்த்தகர்களான திரு சி.விஷ;ணுசுந்தரம், திரு அ.துரைராசா, திரு ஐ.காத்தாமுத்து, திரு மு.மா. பாலசிங்கம் முதலானவர்கள் பாடசாலையின் நாற்சுற்று மதில்களையும், முந்திய இரு கட்டிடங்களையும் இணைக்கும் மாடிக் கட்டிடங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தார்கள். இப்பாடசாலையின் வளர்ச்சியில் நெடியகாட்டு இளைஞர்களின் பங்களிப்பு அதிகமானது. தற்போது வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்களின் உதவியோடு விளையாட்டு மைதானத்தையும் அமைத்துள்ளனர்.