ஆளில்லா விமானத் தாக்குதல் உள்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான விவரங்களை செனட் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
பயங்கரவாதிகளின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் சட்டப்படி சரியானவை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், அல் காய்தா பயங்கரவாதிகள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலை நியாயப்படுத்தி இருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆளில்லா விமானத் தாக்குதல் உள்பட நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்ள அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியது: தேசிய பாதுகாப்பு தொடர்பாக செனட் உறுப்பினர்களுடன் ஒபாமா விவாதிக்க உள்ளார். இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உளவுக் குழுக்களின் செயல்முறைகள் குறித்த விளக்கத்தினை, சட்ட ஆலோசனைக் குழுவுக்கு அளிக்க, சட்டத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவாதம் ஆரோக்கியமானது என அவர் நம்புகிறார். பயங்கரவாதத்துக்கு எதிராக, உறுதியான சட்டத்தினை இயற்ற நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பையும் அவர் எதிர்பார்க்கிறார் என்றார்.
பிரென்னன் ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநராக பொறுப்பேற்கவுள்ள ஜான் பிரென்னன், ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு தலைமை ஆலோசகரான அவர் இது குறித்துக் கூறியது: அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் அல் காய்தா பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, அவர்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குல் நடத்தப்படுகிறது. இதனை அமெரிக்கா வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறது. இத்தாக்குதல், முழுக்க முழுக்க சட்டப்படி நடத்தப்படுகிறது.
இதில், போர் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது. குடிமக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க இம்முறை பின்பற்றப்படுகிறது என்றார் பிரென்னன்.