போப் ஆண்டவரை ரோமிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 28ம் திகதி பதவிவிலகுவதாக 85 வயதான 16ம் போப் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இதன் பின்னர் அவர் வாட்டிகன் சிட்டியிலேயே தங்கியிருப்பார் என்ற தகவலும் நேற்று வெளியாகியது. எனினும் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கத்தோலிக உயர் பீடத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
பதவிவிலகிய போப் ஒருவர் அங்கே தங்கியிருந்தால் புதிதாக அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவரால் அவரது கடமைகளை சுயாதீனமாக மேற்கொள்ளவோ , தீர்மானங்களை எடுப்பதிலோ சிக்கல்கள் தோன்றும் என கார்தினால்களில் ஒரு சாரார் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக்கருத்தில் கொண்டே போப் பெனடிக் பதவி விலகிய உடன் அவரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே அங்கு போப் பதவிக்கு போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாகவும், பதவியை பெறுவதற்கான பனிப்போர் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த போப்பை தெரிவு செய்யும் பொருட்டு 117 கார்தினால்கள் அடுத்த மாதம் கூடவுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த போப்ஆக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் சூடான விவாதங்கள் தற்போது ஆரம்பித்துள்ளன. இம்முறை கறுப்பினத்தவரொருவர் நியமிக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
கானா நாட்டைச் சேர்ந்த கார்தினல் பீட்டர் டேர்க்ஸன் அல்லது கிழக்கு நைஜீரியாவின் பிரான்சிஸ் அரின்சே ஆகிய இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எனினும் கறுப்பின போப்பை நியமிப்பது இனவெறிக் கருத்துக்கள் பரம்பிக்கிடக்கும் கிழக்கு ஐரோப்பாவில் அவ்வளவு இலகுவானதொரு காரியமல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட இருவரைத் தவிர சான் போலோவின் கார்தினல் ஒடிலோ சிரேரர், பிரான்ஸ்- கனேடிய கார்தினல் மார்க் ஹவுலெட், இத்தாலிய- ஆர்ஜன்டீனரான லியணார்டோ சண்ரி ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுதல் சற்று கடினமானதாகவே கருதப்படுகின்றது.
போப் பதவியை 1523ஆம் ஆண்டின் பின்னர் இத்தாலியர் அல்லாத போலந்து நாட்டின் ஜோன் போன் II மற்றும் பதவிவிலகவுள்ள ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 16ம் போப் பெனடிக் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இதுவரை வகித்துள்ளனர்.
எனவே இம்முறை இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டுமென ஒருசாரார் கடுமையாக வாதிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இம்முறை அப்பதவி வளர்ந்து வரும் நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கபடவேண்டுமென்ற வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கத்தோலிக்க சமயத்தை பெரும்பான்மையாகக் கொண்ட லத்தீன் அமெரிக்க அல்லது அச்சமயம் வேகமாக வளர்ந்துவரும் ஆப்பிரிக்க கண்ட நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.