Search

சிதம்பராக்கல்லூரி: தோற்றமும் வளர்ச்சியும்,பகுதி 2

சாரணீயம்!

பெரியார் பேடன் பவல் பிரபு அவர்களால் 1907ம் வருடம் 120 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட சாரணீயம், இலங்கையில் 1912ம் வருடமும் யாழ்மாவட்டத்தில் 1916ம் வருடம் 5 துருப்புக்களுடன் (Troops) 120 பேருடனும் ஆரம்பிக்கப்பட்டது. எமது கல்லூரியில் 1942ம் வருடம் 13 இளஞ்சிறார்களுடன் தொடக்கி வைக்கப்பட்டது.

கல்லூரியில் சாரணீயத்தை ஆரம்பித்து அதனை ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு வந்த பெருமை எமது கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியருமான திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களையே சாரும். அன்னார் 1942ம் வருடம் சாரணீயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 1967ம் வருடம் வரை எமது கல்லூரிச்சாரணர்கள் பங்குபற்றிய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு சாரணர்களது முன்னேற்றத்துக்கும், பெற்ற வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருந்துள்ளார். அன்னார் வவுனியா மாவட்டத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்று அம்மாவட்டத்தின் சாரண ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டது நாம் பெருமை கொள்ள வேண்டியதொன்றாகும். திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களின் நல்லெண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சாரணீயம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து யாழ் குடாநாட்டில் மட்டுமன்றி இலங்கையிலேயே முன்னணியில் நின்றதும் நாம் பெருமைப்படக்கூடியதாகும்.

திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியருமான திரு.வி.இரத்தினசிங்கம் அவர்கள் சாரணர் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார். சிரேஷ்ட பிரிவிற்கு எமது கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் அதிபருமான திரு. கோ.செல்வவிநாயகம் அவர்கள் இப்பொறுப்பினை ஏற்றுக் கல்லூரிக்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்தார். இவர் அகில இலங்கை சாரணீயபயிற்சிக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகவும், 1980ம் வருடம் யாழ் மாவட்ட சாரண உதவி ஆணையாளராகவும், இதன் பின்னர் யாழ் மாவட்டம் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் பருத்தித்துறை மாவட்ட ஆணையாளராகவும் பொறுப்பேற்றார். கல்லூரிச் சாரணர் குழு பெற்ற வெற்றிகளுக்கு சாரணாசிரியர்களான திருவாளர். கோ.குழந்தைவேல், எஸ்.சரவணபவானந்தன், நா.சுவாமிநாதன், சு.சாந்தமூர்த்தி, ஏ.சுந்தரம்பிள்ளை, கு.அப்பாத்துரை, கோ.சற்குணபாலன், சு.பழனிவடிவேல், ஆகியோரும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரிச் சாரணர் குழு பல சமூக சேவைகளிலும் பொதுநலத் தொண்டிலும் காலத்திற்குக் காலம் ஈடுபட்டு ஆற்றிய சேவைகள் உரிய அதிகாரிகளினால் பாராட்டப்பட்டதை யாவரும் அறிவர். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

1) தொண்டமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த உற்சவ காலங்களின் போது அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டி பக்தர்களுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் உதவியமை.

2)கல்லூரியில் புதிதாகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்ட போதும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களிலும், கல்லூரிப் பொருட்காட்சிகள் நடைபெற்ற தினங்களிலும் பல சிரமதானப்பணிகளை மேற்கொண்டமை.

3)நீரூரியல் ஆராய்ச்சிக் கழகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஒவ்வொரு தவணையிலும் நீர் படுகைகளில் அவர்களின் ஆராய்ச்சிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தமை.

4) சுகாதார வாரங்கள் நடைபெறும் காலங்களின் போது பருத்தித்துறை சுகாதார வைத்திய உத்தியோகத்தரின் வேண்டுகோளை ஏற்று சுகாதார விழாவினை திறம்பட நடத்துவதற்கு உதவிபுரிந்தமை.

5) வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையைச் சுத்தப்படுத்தியும், வல்வை மகளிர் கல்லூரியைப் புதிதாக அமைத்த போது கல்லூரிக் கட்டிடங்கள் அமைக்கப்பட இருந்த காணியைத் துப்பரவு செய்தும் கொடுத்தமை.

6) கௌரவ முன்னாள் பிரதமர் திரு.டட்லி சேனநாயக்கா அவர்களின் வருகையின் போதும், கௌரவ முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் திரு.ஆர்.பிறேமதாசா அவர்களின் வல்வெட்டித்துறை வருகையின் போதும், இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களின் பலாலி வருகையின் போதும், மாட்சிமை தங்கிய மகா தேசாதிபதி திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களின் பலாலி வருகையின் போதும் மரியாதை அணிவகுப்பை நடாத்திச் சிறப்பித்தமை.

7) 1958ம் வருடம் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பிற மாவட்டங்களில் இருந்த அகதிகள் கப்பல் மூலம் பருத்தித்துறை துறைமுகத்துக்கு வந்திறங்கியபோது வேண்டிய உதவிகள் புரிந்தமை.

8) கைதடியிலுள்ள நவீல்ட் பாடசாலையில் பாசறை அமைத்து அப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மேற்கொண்டும், காயமுற்ற பொதுமக்களுக்கு அரசினர் பொது மருத்துவமனையில் உடனுதவும் பணியில் ஈடுபட்டும் ஏழுநாட்கள் வரை தொடர்ந்து உதவியமை.

9) 1958 ம் வருடம் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற சீனகலைக் கண்காட்சியின் போது பொருட்காட்சியினைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கல்வியமைச்சின் உதவிச் செயலாளரை கௌரவிக்கும் முகமாக அணிவகுப்பு மரியாதையை நடத்தியமை.

10) கோப்பாய்ப்பகுதிச் சாரணர்களுக்கான பயிற்சிப் பாசறை ஒன்றை எமது கல்லூரியில் அமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுத்தமை.

11) 1992,1993ம் வருடங்களில் மாவட்ட அணித்தலைவர் பாசறையை எமது கல்லூரியில் நடாத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமை.

12) சாரணத்தலைவர்களுக்கான பயிற்சி நெறிகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் வேண்டிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியமை.
மேற்படி சம்பவங்கள் யாவும் எமது சாரணர்கள் காட்டிய திறமையாகும். கொடுக்கப்பட்ட கடமைகளைக் கச்சிதமாகவும், திறம்படவும் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் என்று சொன்னால் மிகையாகாது.

கல்லூரிச் சாரணர்குழு மேலே குறிப்பிட்ட கடமைகளைப் புரிந்ததோடு மட்டும் நில்லாது யாழ் மாவட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் பல போட்டிகளிலும் விழாக்களிலும் பங்குபற்றி பல சாதனைகளைப் புரிந்ததுடன் வெற்றிகளையும் ஈட்டியது. நடைபெற்ற போட்டிகளின்போது ஒவ்வொரு தடவையும் வழமையான உயர்தரத்தை நிலைநிறுத்தியதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது. இவர்கள் ஈட்டிய வெற்றிகள், சாதனைகள் சில.

1) யாழ். பழைய பூங்காவில் 1957ம் வருடம் நடைபெற்ற வருடாந்தப் போட்டியில் முதன்முதலாகக் கலந்து கொண்டு பெரும்பாலான பார்வையாளர்கள், இதர சாரணர்கள், சாரணாசிரியர் ஆகியோரது பாராட்டைப்பெற்றது.

2) 1960,1961,1962,1965 ம் வருடங்களில் யாழ். பழைய பூங்காவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி சிதம்பரா சாரணர்கள் யாழ்மாவட்டத்தில் சிறந்த சாரணர் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘ரோட்டரிக் கேடயத்தைப்’ பெற்றுக்கொண்டது. 1952ம் வருடம் சாரணர்களுக்கான போட்டிகள் யாழ்மாவட்டத்தில் தொடங்கப்பெற்று 1965ம் வருடம் வரை நடைபெற்ற 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் சிறந்த சாரணர் குழுவாக சிதம்பரா சாரணர்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

3) 1962ம் வருடம் அகில இலங்கை ரீதியாக நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றும் தரத்தை எமது சாரணர்குழு பெற்றது.

4) 1963ம் வருடம் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி ‘லோறன்ஸ் பெர்னாண்டோ’ கொடியினை யாழ் இந்துக்கல்லூரி பெற்றுக் கொள்ள விசேட பாராட்டு (Honourable mention) என்ற ஸ்தானத்தை சிதம்பராக்குழு பெற்றுக் கொண்டது.

5) 1965, 1968,1970 ஆகிய வருடங்களில் அகில இலங்கையிலுமே ஆகக்கூடிய இராணிச்சாரணர்களை உருவாக்கி அதற்கான கொடியினைப்பெற்றுக் கொண்ட பெருமையும் சிதம்பரா சாரணர் குழுவுக்கு உண்டு.

6) 1968,1969,1970 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக அகில இலங்கையிலுமே சிறந்த சாரணர்குழு என்ற ஸ்தானத்தைப் பெற்றதுடன், ‘சேர் அன்று கொல்டிக்கொற்’ வெற்றிக் கிண்ணத்தையும் மேன்மை தங்கிய மகாதேசாதிபதி திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களிடமிருந்து இராணி மாளிகையில் பெற்றுக் கொண்டது.

7) 1969ம் வருடம் யாழ் மாவட்டத்தில் மீண்டும் சிறந்த குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘ரோட்டரிக் கேடயத்தைப்’ பெற்றுக்கொண்டது.

8) 1970 ம் வருடம் ‘பீற்று’ (நுவரெலியா) பாசறையில் நடைபெற்ற ‘தருசின்னப்’ பயிற்சியில் சிதம்பராக்குழு சாராணாசிரியர் திரு.வி.இரத்தினசிங்கமும், சிரேஷ்ட சாராணாசிரியர் திரு.கு.அப்பாத்துரையும் சித்தியடைந்து ‘தருசின்ன’ விருதைப் பெற்றனர்.

9) 1970ம் வருடம் தொடக்கம் 1980ம் வருடம் வரை யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற சாரணர் விழாவில் பங்குகொண்டு 1973ம் வருடம் தவிர்ந்த ஏனைய வருடங்களில் தொடர்ச்சியாக இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. 1976 ம் வருடம் நடைபெற்ற விழாவில் சாரண பிரதம ஆணையாளர் திரு.ஹேமபாலா ரத்னசூரியா அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார்கள்.

10) 1976ம் வருடம் தொண்டமானாறு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற உபமாவட்ட விழாவில் பங்குபற்றி தனி ஒரு போட்டியான பாசறைப் பரிசோதனையில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

11) பலவருடங்களின் பின்னர் 1980ம் வருடம் மீரிகமவில் தமிழ்மொழியில் நடாத்தப்பட்ட ‘தருசின்னப்’ பயிற்சியில் எமது கல்லூரியிலிருந்து திரு.கோ.குழந்தைவேல், திரு.மு.இரவீந்திரன், திரு.எஸ்.வேலாயுதபிள்ளை, திரு.சி.சிவகுமார், திரு.நா.காந்தரூபன், திரு.இ.அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இப்பயிற்சி நெறியின் தலைவராக கல்லூரி அதிபரும், தலைமைப் பயிற்றுனருமான திரு.கோ.செல்வவிநாயகம் அவர்கள் கடமையாற்றினார்கள். இவர்களில் திரு.மு.இரவீந்திரன் அவர்கள் ‘தருசின்ன’ விருதைப்பெற்றுக்கொண்டார். இவர்களில் திரு.கோ.குழந்தைவேல் அவர்கள் மாவட்ட உதவி ஆணையாளராகவும்(நிர்வாகம்), திரு.மு.இரவீந்திரன் அவர்கள் மாவட்ட உதவி ஆணையாளராகவும்(சாரணர் பிரிவு) நியமனம் பெற்றார்கள்.

12) 1983ம் வருடம் நடைபெற்ற அகில இலங்கை சாரணர் ஜம்போறியில் எமது சாரணர் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதனையொட்டி எமது சாரணர் குழுவினருடனும் கல்லூரி அதிபரும், மாவட்ட ஆணையாளருமான திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுடனும் இலங்கை வானொலி சார்பில் பேட்டி கண்டு அதனை வானொலி மூலமாக ஒலிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது.

13) 1991,1992ம் வருடங்களில் பருத்தித்துறை மாவட்ட வருடாந்த சாரணர் விழாக்களில் பங்குபற்றி பாசறைத்தரப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

14) 1993ம் வருடம் தொண்டமானாறு சந்நிதி கோவிலில் நடைபெற்ற பருத்தித்துறை மாவட்ட சாரணர் பாசறையில் பங்குபற்றி 40 அடி உயரமான கோபுரம் ஒன்றினைக் கட்டி முடித்தமைக்காக எமது குழுவிற்குப் பாராட்டுக் கிடைக்கப் பெற்றது. நிலைக்காட்சியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் நிலைக்காட்சிக்கான முழுப்புள்ளிகளும் கிடைக்கப்பெற்றன.

15) கல்லூரித் தேவைகளுக்காக நிதி தேவைப்பட்ட போது வல்வைப் பொதுமக்களுடைய அனுசரணையுடன் களியாட்ட விழா ஒன்று 1959ம் வருடம் கல்லூரி மைதானத்தில் நடாத்தப்பட்டது. இக்களியாட்ட விழாவின் போது கல்லூரிச் சாரணர்களும் தங்களது சாதனைகளைச் செய்து காட்டினார்கள். அதில் திரு.சி.கதிர்காமத்தம்பி, திரு.ஏ.சிவானந்தம் ஆகிய இருவரும் நிலத்தின் அடியில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தங்கி இருந்து சாதனை புரிந்ததும் ஒன்றாகும்.

16) பிரதம சாரண ஆணையாளர் ஈ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள் 1964ம் வருடம் (28.05.64) கல்லூரிக்கு விஜயம் செய்த போது எமது கல்லூரிச் சாரணர் குழுவை இலங்கைத் தீவினிலே தாம் பார்த்தவற்றுள் முதற்தரமான குழுவென்றும், இதுவரை தான் பார்த்தவற்றுள் திறமானதொரு சாரணர் அறையைக் கொண்டிருப்பது எமது கல்லூரியின் சாரணர் அறையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

17) இராணிச்சாரணர் கொடியினை யாழ் மாவட்டத்தில் முதன்முதலாகப் பெற்றுக்கொண்ட பெருமையும் இலங்கையிலேயே தொடர்ந்து மூன்று தடவைகளாகச் சிறந்த குழு என்ற பெருமையும் சிதம்பரா சாரணர் குழுவிற்கே உண்டு.


 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *