ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று, செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக வெளியிட்ட புகைப்படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாயில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் மூலம் 7 விண்கலங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள், பல்வேறு தாதுக்கள் உள்ளதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளன.
ஆனால் உயிரினங்கள் இருந்தது குறித்து எந்தத் தகவலும் அவற்றில் இல்லை. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு விஞ்ஞான ஆர்வலர் தான் நடத்தும் ப்ளாகில், நாசாவின் க்யூரியாசிட்டி எடுத்தனுப்பிய புகைப்படத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாகக் கூறி அந்தப் படத்தை வெளியிட்டிருந்தார்.
நான்கு கால்கள் மற்றும் வாலுடன் காட்சி தரும் அந்த உருவத்தைப் பார்த்து நாசா அதிர்ச்சியடைந்துவிட்டது. காரணம் படத்தை வெளியிட்டதே அந்த அமைப்புதானே. தங்களுக்கு தெரியாத இந்த விடயம் எப்படி ஜப்பான் ப்ளாக்கருக்கு தெரிந்தது என்று முதலில் திகைத்தனர்.
பின்னர் தான் தெரிந்தது இது ஒரு பாறையின் வடிவம் என்றும், பார்க்க எலி மாதிரியே உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் பற்றி வெளியான மற்றொரு படத்தில் ஒரு பெண் சிலை இருப்பது போல சித்தரித்து பரபரப்பு கிளப்பியது நினைவிருக்கலாம்.
எனினும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அறிவியல் சோதனைகள் நடத்துவோம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.






















Leave a Reply