சீனா கழிவறையில் கிடந்த குழந்தை தாத்தா, பாட்டியிடம் ஒப்படைப்பு

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகின்றது.

அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

கழிவறை குழாயின் காற்று போக்கி வழியாக குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்ட சிலர் உடனடியாக பொலிசாருக்கும், மீட்புப்படையினருக்கும் தகவல் அளித்தனர். உடனே மீட்புப்படையினர் விரைந்து வந்து கழிவுநீர் பிளாஸ்டிக் பைப்பை அப்படியே வெட்டி எடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பைப்பை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த டொக்டர்கள் குழந்தையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சாதுர்யமான முறையில் குழாயை வெட்டி எடுத்து குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

கழிவறை பைப்பில் உயிருக்கு போராடிய பச்சிளம் தளிர் மீட்கப்பட்ட செய்தி உலகெங்கும் உள்ள ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் உலாவரும் வேளையில் குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் பொலிசார் மும்முரமாக ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக, இச்சம்பவம் பற்றி தகவல் தந்த பெண்ணிடம் இருந்து விசாரணையை தொடங்க விரும்பிய பொலிசார், அவரை விசாரித்த போது முன்னுக்கு பின்னாக தகவல்களை அந்த பெண் கூறினார்.

இதனால் அவர் மீது சந்தேகப்பட்டு வீட்டை சோதனையிட்ட போது சில பொம்மைகளும், ரத்தக்கறை படிந்த ‘டாய்லட் பேப்பர்’களும் சிதறிக் கிடந்தன. காதலனுடனான நெருக்கத்தால் கருத்தரித்த அந்த பெண், தனி வீட்டுக்குள்ளேயே பத்து மாதங்களை கழித்துள்ளார்.

பிரசவ வலி ஏற்பட்டதும், கழிவறைக்குள் சென்று தனக்குத்தானே பிரசவம் பார்த்த அவருக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், அந்த குழந்தை கழிவறை பீங்கானில் வழுக்கி விழுந்து சிக்கிக் கொண்டதாகவும், காப்பாற்ற முயன்றும் பலனின்றி கழிவறை குழாய் ‘எல்’ வளைவில் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு படைக்கு வெளிநபர் போல் புகார் அளித்ததாகவும் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியுள்ளார்.

தற்போது அந்த குழந்தையின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய குழந்தையை தாய்வழி தாத்தா – பாட்டி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டதாக டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *