Search

நன்றி ஜசீகா…- ச.ச.முத்து

தமிழர்கள் எல்லோருக்குள்ளும் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் பெரு வலி ஒன்றை தாயகம் இழந்த பெரும் சோகத்தை உலகின் மெத்தனப்போக்கால் அழிக்கப்பட்ட ஒரு அருமையான விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த ஒரு பெரும் காரியத்தை செல்வி.ஜெசீகா யூட்’ அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஒரு பாடல்.அதுவும் இரண்டு பாடல்களை மிககவனமுடன் இணைத்து பாடிய லாவகம்.

அது எல்லாவற்றையும்விட அந்த பாடல் சொன்ன கருத்து.வயலின் கலைஞர்களின் ஆரம்ப மெருகூட்டலுடன் மெதுவாக தோல்வி நிலையென நினைத்தால் என்று ஆரம்பிக்கும்போதே பெரும் சுனாமி ஒன்றை மனங்களுக்குள் உருவாக்கி வைக்கப்போகின்றது என்ற அடையாளங்கள் தெரியஆரம்பித்த அந்த அற்புதம் அந்த குரல்.

இந்த சுப்பர்சிங்கர்,யூனியர்சிங்கர்,பேபிசிங்கர் போட்டிகளை பற்றியும் அதன் பின்னால் உள்ள வியாபார,சந்தைப்படுத்தும் ரசவாதங்கள் பற்றியும் ஆயிரம்பக்கங்கள் எழுதலாம்.அதிலும் இத்தகைய போட்டிகளில் ஏற்றப்படும் மிகமிக சிறு குழந்தைகள் மிகவும் யந்திரத்தனமாக இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே பயிற்றுவிக்கப்படுவதும் அந்த போட்டியிலேயே பார்த்தும் கொள்ளலாம்.சில வேளைகளில் அது மனதுக்குள் சுருக் என்று தைப்பதும் உண்டு.

எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதே தொலைக்காட்சிகளின் விளம்பரகட்டணங்களை தீர்மானிக்கும் என்பதால் அந்த பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்காக எல்லாவிதமான ஜிகினா வேலைகளையும் செய்யத்தயாரான தொலைக்காட்சிகளின் மரதன் ஓட்டபோட்டியில் இதுவும் ஒரு நிகழ்வு.

ஆனால் இவை அல்ல முக்கியம்.இத்தகைய ஒரு மேடையைக்கூட தனது மக்களின் கூட்டுவலியை, உலகின் மிகப்பெரும் செழுமைகளை கொண்ட பழமையான செம்மொழியை பேசும் ஒரு மக்களிடம் இருந்து அவர்களின் தாய்நிலம் எப்படி பிடுங்கி எறியப்பட்டது என்றும்,மண் இழந்து வெளியேறும் சோகத்தை ஒத்த துயரம் வார்த்தைகளால் வடியப்படக்கூடியது அல்ல என்று லட்சம் கோடி மக்கள் பார்க்கும் போது வெளிப்படுத்தியதற்கு ஜசீகாவின் பாடல் தெரிவு அபாரம்.அதனைவிட முழுக்க முழுக்க தோல்விகளாலேயே சூழப்பட்ட ஒரு இனத்தின் குரல் ‘உரிமை இழந்தோம் உடமையை இழந்தோம் உணர்வை இழக்கோம் என்று சொல்வதுபோலவே ஜசீகா தமக்காகவே பாடியதாக பல லட்சம் மக்கள் மனதால் நினைக்கும் அளவுக்கு எல்லோருடைய குரலாகவுமே ஜசீகா பாடி இருக்கிறார்.

இங்குதான் இன்னொரு முக்கியமான விடயமும் இந்த காலத்துக்கான பாடமும் இருக்கிறது.இன்று அரசியல் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் பெரீயவர்கள் அனைவருக்கும் சேதியும் இதில் உள்ளது.அதுதான் கிடைக்கும் தளத்தை,கிடைக்கும் மேடையை,கிடைக்கும் ஒற்றை சந்தர்ப்பத்தைக்கூட எவ்விதம் எம் மக்களின் அபிலாசைகளை சொல்ல பயன்படுத்துவது என்பதே.தமிழகதொலைகாட்சிகள் அனைத்தும் வேறுவேறு பெயர்களில் வேறுபட்ட நடுவர்கள் வித்தியாசமான அனுசரணையாளர்களை முன்னிறுத்தி இப்படியான பாட்டுப்போட்டிகளை, சிறந்த குரல் தேர்வுகளை நடாத்திவருகிறார்கள்.அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியின் ‘யூனியர்சுப்பர்சிங்கர்’ நிகழ்ச்சியும். ஆனால் பாருங்கள். ஒரு சாதாரண பாடல்நிகழ்ச்சியை தனது தேசத்தின்அடிமை நிலையை சொல்ல பயன்படுத்துகிறார்  என்று.அது.அது மிக முக்கியம். எல்லா இழந்தாலும் இழக்கமுடியாத நம்பிக்கையில் எழுவதுதான் இத்தயை முயற்சிகள்.ஒரு திரைப்பட பாடல்.எந்த காட்சிக்காவோ,எந்த கதாநாயகனுக்காகவோ எழுதப்பட்ட பாடல்.ஆயினும் அதுவே இந்த இடத்தில் அந்த பாடலின் திரைக்காட்சி அனைத்தையும் மறக்க வைத்துவிட்டு ஏதோ நம் உயிரை தொலைத்த சோகம் போல,நம் மனங்களுக்குள் வெளிப்படுத்த முடியாமல் திரண்டு நின்ற சோகத்தின்,பெரு வலியின் வெளிப்பாடாக அனைத்து தமிழர்களும் பார்த்து உணர வைத்த கச்சிதம் இந்த மேடை தெரிவு. இதனை சொல்ல அந்த சிறுமி ஜசீகாவோ அவளின் தாய் தந்தையோ எந்தவொரு ராஜதந்திர கல்லூரியிலும்,சட்டநிறுவனத்திலும் கற்று வரவில்லை.அவர்கள் ஒரு இனத்தின் சோகம் பற்றி தெரிந்து,மனதால் உணர்ந்து வந்திருக்கிறார்கள்.அதன் வெளிப்பாடுதான் இந்த பாடலும் அது ஏற்படுத்திய அலைகளும்.

ஒரு பெரும் பேரணி அல்லது ஒரு பெரும் அரசியல்போராட்டம் என்னவிதமான சலசலப்புகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இந்த சிறுமியின் பாடலும் அதனை அவள் உள் உணர்வுகலந்துபாடிய விதமும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதான் விடுதலைக்கான ஒரு தேசியஇனத்தின் முயற்சி.விடுதலைக்கான குரலை எந்த இடத்திலும் எப்போதும் வெளிப்படுத்தியபடியே இருந்தாக வேண்டும் என்பதை இதில் நாம் பார்க்கலாம்.

கிடைக்கின்ற சந்தர்பங்களைக்கூட அடிபணிவு கருத்துகளையும், அடிமை சொல்லாடல்களையும் வெளிப்படுத்தி உலக சக்திகளின் குரலாக தம்மை தாமே கருதும் பெரியவர்கள் எல்லோருக்கும் இந்த சிறுமி சொல்லி இருக்கும் சேதி உறைக்ககூடியது.உணர்ந்தால் நன்று.நிச்சயமாக இந்த பாடலை கேட்ட எவரும் அன்று ஏதோ ஒரு கணத்தில் தன்னும் நினைத்திருப்பார்கள் தமிழீழம் வென்றாக வேண்டும் என்று.இவர்களின் தாயகவிடுதலை கனவு நனவாக வேண்டும் என்று.

அதுவே அந்த பாடல் ஏற்படுத்திய வெற்றி. அது போதும்.அதற்காக பாராட்டுவோம் ஜசீகாவை. பிறகு, இந்த பாடலை கேட்டு,அல்லது மீண்டும் மீண்டும் கேட்டு அழுதுவிட்டு அப்படியே துவண்டு கிடக்கப்போகின்றோமா..?அது அழுவதற்கான பாடல் அல்ல.எழுவதற்கான பாடல்.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
Leave a Reply

Your email address will not be published.