என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!
கருவாகச் சின்னத் தமிழ் ஒன்றைச்
சுமந்ததினாலா? இன்று
தெருவோரம் நீ புரண்டு
உருமாறிப் போனாய்…
கேடு கெட்ட இந்த மாந்தரிடம்
என் சேயை மட்டும் காட்டு என்று
வாய் வலிக்கப் பேசியே உன்
கால் கடுக்க நின்றாயோ…
உன் பிள்ளை இருப்பானா? மாட்டானா?
என்று நெருப்போடு நீ கடக்கும்
தவிப்பான வாழ்க்கை அம்மா..
இது கற்பனையிலும்
வந்திடாத கடும் துயரம் அம்மா..
கத்திக் கத்தி நீ அழுதாலும்
இது புத்தி கெட்ட தேசம் அம்மா
இங்கே அந்தப் புத்தனுக்கும்
உன்னைப் புரியாதம்மா….
என்ன புரியவில்லையா…?
கொத்தணிக் குண்டு வீசி அந்தப்
புத்தனையும் கொன்று நின்ற
அரக்கரம்மா இவர்கள்…
அத்தனை பேரும் இங்கே
பிணம் தின்னும் பேய்கள் அம்மா
ஆட்டம் போடும் அரசுக்குக்
காட்டிக் கொடுத்தே குனிந்து நிற்கும்
இந்தக் கேடு கெட்ட கூலிகளால்
வந்த கேவலம் அம்மா… எங்களுக்கு
இது சந்ததி வழி வந்த
தரித்திரம் அம்மா
செல்ல மகன் நாளை உன்
வாசல் வந்து சேர்ந்திடுவான்….
இப்போ மீதி உள்ள உசிரோடு
வீடு போய் சேர்ந்துவிடு தாயே.
-வல்வை சாரதி