Search

பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி இணையத்தள மகஜர் கையெழுத்திடல்

“தமிழீழ மாவீரர் தினத்தைக் கொண்டாடினார்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிகந்த வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரணித்த தங்கள் உறவுகளை நினைவு கூற தீபமேற்றல் பயங்கரவாதமா? அல்லது நிராயுத பாணிகளாக நின்ற மாணவர்களை ஆயுதம் தாங்கியவர்களை கொண்டு தாக்கியது பயங்கரவாதமா? என்பதை சிறிலங்கா அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு புனர்வாழ்வு தேவை இல்லை. புனர்வாழ்வு தேவைப்படுபவர்கள் அரசாங்க தரப்பிற்குள் தான் இருக்கின்றார்கள். மாணவர்களை விடுதலை செய்துவிட்டு அரசாங்கத்திலிருப்பவர்களுக்கு புனர்வாழ்வு கொடுங்கள் என்றும் இந்த ஆரம்ப நிகழ்வில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைப்பு சிங்கள அமைப்பாக இருக்கின்ற போதிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் அக்கறை எடுத்துச் செயற்படுகின்றமையை தமிழ் மக்கள் பாராட்டியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாவரும்

http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மகஜரில் கையெழுத்திட முடியும்.

மாணவர்களை விடுவிக்குமாறு கோரும் இந்த இணையத்தள மகஜர் கையெழுத்திடல் நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே கருத்து தெரிவிக்கையில்

யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் தேசிய பிரஜைகளுக்கிடையில் பேதங்களை களையவும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்கவும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கம் தனது நவ தாரளமயவாத முதலாளிதுவ பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களை ஏமாற்றி வசீகரிக்கும் அரசியலை நடத்துகின்றது. அதேபோல் தான் உருவாக்கிய இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்தி முழு நாட்டையும் அடக்கியாள்கின்றது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இவ் இராணுவ மேலாதிக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சாதாரண மனித வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமான குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் இல்லாது செய்துள்ளது. அரசாங்கம் யாழ் மக்களின், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி ஆட்சி செய்ய முயற்சிக்கின்றது. வடக்கில் வீடற்றவர்களுக்கு வீடுகளை பெறுவதற்காக வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலையை பெறுவதற்காக  விவசாயம் செய்யும் உரிமை பறிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் மீனவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் ஒன்று அவசியமாகும்.

தற்போது ஒடுக்கப்பட்டவர்களை இனவாதம் மற்றும் மதவாதத்திற்குள் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஒரு இனவாதத்திற்கு எதிராக இன்னுமொரு இனவாதத்தை வளர்த்தெடுப்பது தீர்வாகாது. ஆகவே சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுப்பட்டு போராட முன்வர வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அதேபோல் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கடத்தல் மற்றும் காணாமல்  போக செய்யும் கலாசாரத்தை உடன் நிறுத்துமாறும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றுமாறும் அரசாங்கத்தின் தேவைகளுக்காக நடத்தப்படும் நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறும் அரசாங்கத்தினை நாம் வலியுறுத்துகின்றோம்.

மேலும் அநீதியான முறையில் சட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

சம உரிமை இயக்கத்தின் இணை ஏற்பாட்டாளர் பழனிவேல் றிச்சர்ட்  பின்வருமாறு கருத்து தெரிவிக்கையில்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் அரச தரப்பினால் கைதுசெய்யப்பட்டு 45தினங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நடைப்பெற்ற மாணவர்களின் ஆர்பாட்டம் மீது தாக்குதல் மேற்க்கொண்ட போலிஸ் மற்றும் இராணுவம் அதனை தொடர்ந்து 13மாணவர்களை கைது செய்தது.

மேலும் 40ற்கும் அதிகமானவர்களை விசாரணை செய்தது. அவர்களில் நான்கு பேரை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி இன்னும் தடுப்பில் வைத்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் அரச பயங்கரவாதம் நடக்கின்றது.

மக்களின் உரிமைகளை உறுதி செய்ய முடியாத பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க முடியாத அரசாங்கம் புலிகள் இயக்கத்தை காரணம் காட்டி பிரச்சனைகளை மூடி மறைத்தது. தற்போதும்  அதேபோல் தேசிய பிரஜைகள் மத்தியில் குரோதங்களை வளர்க்கவும் முரண்பாடுகளை ஏற்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த இனவாத அரசியலை முறியடிக்க வேண்டும் இல்லை எனின் மாபெரும் அழிவிற்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.

அடக்கு முறையை நேருக்கு நேர் எதிர்கொண்டு எதிர்த்து போராடாமல் உடைத்தெறிய முடியாது. ஆகவே அடக்குமுறைக்கு எதிராக சிங்கள தமிழ் முஸ்லிம்மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு கருத்துகளை தெரிவிக்க இருக்கும்  உரிமை மிக முக்கியமானதாகும். தீபமேற்றல்  என்பதும் கருத்து தெரிவிக்கும் முறை தான். அதை நீதிமன்றமும் எற்றுக் கொண்டுள்ளது. மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தீபமேற்றி தமது உணர்வுகளை வெளிபடுத்த முயற்சித்ததால்  தான். துப்பாக்கி சத்தம் ஓய்ந்தால் மாத்திரம் சமாதானம்  உருவாகி விடாது. அதற்கு ஜனநாயகம் அவசியம் என்றார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கருத்து தெரிவிக்கையில்

மரணித்த தன் உறவுகளை நினைவு கூற தீபமேற்றல் பயங்கரவாதமா அல்லது நிராயுத பாணிகளாக நின்ற மாணவர்களை ஆயுதம் தாங்கியவர்களை கொண்டு தாக்கியது பயங்கரவாதமா என அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மாணவர்களுக்கு தேவை இல்லை. புனர்வாழ்வு தேவைப்படுபவர்கள் அரசாங்க தரப்பிற்குள் தான் இருக்கின்றார்கள். கொலை களவு கற்பழிப்பு கடத்தல் போதைப்பொருள் விற்பனை மற்றும் அனைத்து சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தினுள்ளும் பாராளுமன்றத்தினுள்ளும் தான் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *