
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணி என்று குறிப்பிடப்படும் அந்தப் பிரதேச்தில் – நாவற்குழி வீடமைப்புத் திட்டம் என்று பெயர்ப் பலகையும் அங்கு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
திட்டமிட்ட வகையில் குடியேறிய சுமார் 135 சிங்களக் குடும்பங்களுக்கு -கட்டம் கட்டமாக நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்ட வருகின்றன.கொழும்பின் புறநகர்பகுதியான தெஹிவளையில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரினாலும் ஹெல உறுமயக் கட்சியனராலும், குறித்த வீடுகளை அமைக்கும் பணிகளுக்கு நிதி வழங்கப்படுவதாக குடியேறியுள்ள சிங்கள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முறையான அனுமதி எதனையும் சாவகச்சேரி உள்ளுர் பிரதேச சபையிடம் பெறப்படவில்லை என்று தவிசாளர் துரைராசா தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கான சகல அனுமதியையும் நாவற்குழி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வழங்கியுள்ளதாகவும், தேவையான பாதுகாப்பினை இராணுவத்தினர் வழங்கி வருவதாகவும் குடியேறியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வீடமைப்புத் திட்டம் குறித்து செய்தி சேகரிக்கவோ புகைப்படம் எடுக்கவோ, இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை என்றும் உள்ளுர்ச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.