ராஜபக்சே வருகை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைக்கு முயன்ற பண்ருட்டி வேல்முருகன் கைது

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ச 3-வது முறையாக இந்தியாவுக்கு 8-ந் தேதி வருகை தர இருக்கிறார். அவரது இந்திய பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை. இந்து முன்னணியின் ராமகோபாலன் ஒருவர் மட்டுமே ராஜபக்சவை ஆதரிக்கிறார்.

ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது.

இதற்காக இன்று காலை சென்னை சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கூடினர். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கடற்கரை சாலை வழியே ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அவர்கள் அனைவரையும் காவல் துறை  தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published.