இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்துவதுடன், சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்….
நேற்று (08-02-2013) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, முதல்வர் சட்டப் பேரவையில் பதில் உரை அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த அரசைப் பொறுத்த வரையில், இடம் பெயர்ந்து சிறீலங்காவில் முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
இது தொடர்பாக, ஏற்கெனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.
சென்ற ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு வலுவான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தினேன்.
முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், பின்னர் எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தின் வலுவை இழக்கச் செய்தவர் பாரதப் பிரதமர்.
இந்த நீர்த்துப் போன தீர்மானம் மீதே சிறீலங்கா அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வர உள்ளது என்ற செய்தி வந்துள்ளது.
இது போன்றதொரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டு வருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் இந்த மாமன்றத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இதே போன்று, சிறீலங்காக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கொடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கினை காட்டி வருகிறது.
இந்திய மீனவர்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் சிறீலங்கா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று இந்த மாமன்றத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.