இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக இரண்டாம் எலிசபத் மஹாராணி கடமையாற்றி வருகின்றார்.எதிர்வரும் நவம்பர் மாதம் 15 – 17ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மஹாராணி பங்கேற்கக் கூடிய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு, மாநாட்டை வேறும் நாட்டில் நடாத்துமாறு சில நாடுகள் கோரி வருகின்றன.
குறிப்பாக 2015ம் ஆண்டில் மொரிசியஸ் தீவில் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், இம்முறை மாநாட்டை மொரிசியஸ் தீவில் நடாத்துமாறும் கோரப்பட்டுள்ளது.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிவருவோரை திருப்திபடுத்தக் கூடிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பைத் தெரிவித்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்காது தங்களது நாட்டின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தால், மாநாடு எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















Leave a Reply