தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை புறக்கணிக்கப் போவதாக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். துறைமுக தொழிலாளர் நலன் பேணும் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் சமரவிக்ரமே இதுகுறித்து தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் சுற்றுலா பயணிகளும் தமிழகத்தில் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தென் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களை புறக்கணிக்க துறைமுக தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தில் பதாகைகளையூம் துறைமுக தொழிலாளர்கள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும், எந்தவித இறக்குமதி புறக்கணிப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்று கொழும்பு துறைமுக அதிகார சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் போராட்டத்திற்கு தயாராக இருப்பதாக அறியக்கிடைத்தாகவும் எனினும் அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், நிலைமை தொடர்பில் தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியூள்ளார்.
கொழும்பு துறைமுகம் கடந்த வருடத்தில் 41 லட்சம் கொள்கலன்களை கையாண்டதாகவூம் அவற்றில் 70 சதவீதமானவை இந்திய துறைமுகங்களில் இருந்து வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply