இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் தமிழ் இளைஞரொருவரை சிங்கள இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால், படுகாயமடைந்த குறித்த தமிழ் இளைஞர் தற்போது கொலன்ன வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். நேற்றுமுன்தினம் இரவு இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹேயஸ் தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் வசிக்கும் மாடசாமி சுப்பிரமணியம் (வயது 19) என்ற இளைஞரே சிங்கள இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்திலுள்ள ஓட்டோ தரிப்பிடத்தில் தமிழர்கள் ஓட்டோவை நிறுத்தக்கூடாது என அச்சுறுத்தியே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தோட்ட அதிகாரியின் ஒத்தாசையுடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தோட்ட மக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ரூபன் பெருமாளுக்கு தொலைபேசி மூலமாகத் தெரிவித்ததையடுத்து, அவர் இ.தொ.கா. தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, கொலன்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்ததோடு, ஹேயஸ் தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இன இளைஞர்களால் தாக்கப்பட்ட குறித்த இளைஞர் தற்போது கொலன்ன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேவேளை, ஆத்திரம் தீராத அயல் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத் தவர்கள் தம்மை தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்துடன் தோட்ட மக்கள் இருக்கின்றனர் என இ.தொ.காவின் தோட்டத் தலைவி, ரூபன் பெருமாளுக்குத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரூபன் பெருமாள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, கடந்த ஒருவார காலத்திற்குள் இரத்தினபுரி மாவட்டத்தின் வெல்லவல, வளவை, தொலஸ்வல உள்ளிட்ட பல தோட்டங்களிலும் எமது தமிழ் மக்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெற்றிருப்பதனால், எதிர்வரும் காலங்களில் இது குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இரத்தினபுரியில் இனவாத வன்முறை தொடர்கிறது! தமிழ் இளைஞர் மீது சிங்களவர்கள் தாக்குதல்!














Leave a Reply