வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழா நாளை (17.08.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு நாளை காலை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. ஆலய அறிவிப்பின்படி, காலை 8.00 மணிக்கு காலசந்தி பூஜையும், 8.15 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும் நடைபெறவுள்ளதுடன், காலை 10.00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவது வழக்கமாகும். இதன்படி, இம்முறையும் கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு பெருமளவான பக்தர்கள் நல்லூரில் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் அனைவரும் ஆலய வழிபாட்டு ஒழுங்குகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, பக்தி மற்றும் ஒழுக்கத்துடன் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.




















