என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!
அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர்.
என்னை அவரிடம் அனுப்பிய நண்பர் “அவர் வன்முறை போராட்டங்களுக்கு எதிரானவர், எமது போராட்டம், புலிகள் தொடர்பாக ஏதாவது பேசி போன காரியத்தை கெடுத்து விடாதே” என்று எச்சரித்திருந்தார்.
நானும் நமக்கு ஏன் வீண் சோலி என்று முன்னெச்சரிக்கையுடனேயே அவருடன் உரையாடினேன்.
பல்கலைக்கழகத்தில்தான் சந்திப்பு நடந்தது. நான் விடைபெற ஆயத்தமாகும்போது வீட்டுக்கு உணவருந்த வருமாறு வற்புறுத்தி அழைத்தார். சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
என்னை சிரித்தபடி தலைவர் பிரபாகரனின் படம் வரவேற்றது. அதிர்ந்து போய் நண்பர் அவரைப்பற்றி சொன்ன கதையையும் கூறி, இது எப்படி உங்கள் வீட்டில் என்று கேட்டேன்.அவர் கூறியது இதுதான், “நான் விரும்புகிறேனோ இல்லையோ தமிழர்களுக்கு தலைவர் அவர்தான். அவரது போராட்ட முறைகளோடு நான் முரண்படலாம் அதற்காக அவரது தலைமைத்துவத்தை நாம் எப்படி நிராகரிக்கமுடியும். கடல்கடந்து தேசம் கடந்து பல்லின பல் கலாச்சார, வேற்று மொழிச் சூழலில் எனது அறிவுஜீவித்தனத்தையும் புலமையையும் தாண்டி என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்.
அதற்காகவே இந்த படத்தை இங்கு மாட்டியிருக்கிறேன். எனது பிள்ளைகளும் அவர்களது பூர்வீகத்தை மறக்ககூடாதல்லவா.. இந்த ஒற்றைப்படம் அவர்களுக்கு தமது பூர்வீகத்தை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கும்” என்றார்.
எழுத்தாளர் பரணி கிருஷ்ணரஜனி