பசியோடு இருந்த உன் தாகம்…(அன்னை பூபதி நினைவாக)

நீதிக்காய் எழுந்தாய்

நெடுங்கிடையாய் கிடந்தாய்

கருசுமந்த வயிற்றினிலே

பசி என்ற நெருப்போடு

மாமாங்கம் வீதியிலே

அமர்ந்தாய் எங்கள் தாய்நீ.

 

விழியாய் நாம் காத்துநின்ற

விடுதலைக்கான பெருவலியாய்

நாம் சுமந்துநின்ற

போராட்ட அமைப்பை

காலினுள் இழுத்து வந்து

தேய்த்து அழுத்தி விட

காந்தி தேசத்து கயவர்கள்

கையில் ஆயுதம் ஏந்தி வந்து

குவிந்த ஒரு பொழுதில்

நீதிகேட்ட ஒரு குரலாய்

நீ எழுந்தாய்-எங்கள் தாய்நீ

ஆதிக்க வழியாய்

அவர்களின் துணையாய்

வந்திறங்கி நின்று

பெரும் ஊழி நடாத்த

அமைதி பெயர் தாங்கி

வந்த பெரும் படைக்கெதிராய்

போர் செய்தாய்-நீ எம்தாய்.

வெல்ல நேரமும் குறித்து

விரைவாக அழித்தெறிந்து

விடலாம் என்று கனவுடன்

வந்திறங்கி நின்ற படைக்கு

வீரிய சேதி சொன்னாய்- நீ எம்தாய்.

எம் வீரர் தொகையும்

அவர் ஏந்தி ஆயுதமும்

எல்லாம் கணக்கெடுத்த அவர்கள்

அம்மா விடுதலைக்காக

எல்லாம் இழக்க தயாரான

உன்னை கணக்கெடுத்த தவறினர்.

அதனால்தான் மீண்டும் ஒருமுறை

காந்தியை ஈழத்தில் கொன்று புதைத்தனர்.

எம் தாயே

எதை நீ எதிர்பார்த்தாய்

நாம் வைக்கும் அந்த

ஒற்றை பூவையா

இதோ நானெழுதி

புனையும் பாவையா

ஒரு சிறு அகல் ஏற்றி

வைத்து தொழும் பொழுதையா

இல்லையே

முழுதான ஈழத்தின் விடுதலையே

பசியோடு இருந்த உன் தாகமாய்

விழிமூடும் போதில் உன் விருப்பமாய்

இருந்தது-இருக்கிறது-இருக்கும்

முழுதான ஒரு விடுதலையை

ஈழம் பெறுகின்ற பொழுதில்தான்

உன் தாகமும் அடங்கும்

ச.ச.முத்து

Leave a Reply

Your email address will not be published.