தந்தை செல்வாவின் நினைவு நாளுக்கு சிறப்புரை ஆற்றுவதற்காக நினைவுநாள் ஏற்பாட்டு குழுவினர் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்காவின் அமைச்சருமாக இருந்தவரான இராசதுரையை அழைத்திருந்தனர்.
தமிழினத்தின் விடுதலை வேட்கையை வாக்குகளாக்கி அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினரான செ.இராசதுரை அதன்பின்னர் சிங்கள அரசில் இணைந்தவர். அது மட்டும் இல்லாமல் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று அழிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்
இதற்கான சன்மானமாக சிங்கள அரசின் அமைச்சராக நீண்டகாலம் செயற்பட்டவர். தமிழ் மக்கள் மீதான 83 இனப்படுகொலை காலத்தில் சிங்கள அரசின் அமைச்சராக இருந்ததுடன் இனப்படுகொலை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் பிரச்சாரமும் செய்தவர் இவர்.
1989ம் ஆண்டுவரை சிங்களஅரசின் அமைச்சராக இருந்துகொண்டு அதன் தமிழின படுகொலைகளிலும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற குடியேற்றங்களுக்கும் ஆதரவாக இருந்தவர்.
இத்தகைய ஒருவரை தந்தை செல்வாவின் நினைவு தினத்துக்கு அழைத்ததில் தமிழ் மக்கள்
கோபமும் அதிருப்தியும் அடைந்திருந்தனர். ஆனால் சுற்றிவர சிங்கள படைகள் நிற்கும்போது மக்கள் தமது கோபங்களையும் அதிருப்திகளையும் சினத்தையும் தமது மனங்களுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டி இருக்கிறது.
இன்று (26.04.2012) தந்தைசெல்வா சதுக்கத்தில் மலர்வணக்க நிகழ்வு முடிந்து செ.இராசதுரை பேச எழுந்த நேரத்தில் முன்னாள் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எழுந்து ‘துரோகி இராதுரையே வெளியே போ’ ‘தமிழினதுரோகி இங்கு பேசமுடியாது’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு தன்னுடன் கொண்டுசென்றிருந்த கறுப்புகொடியை காட்டினார்.
இதனால் அதிர்ச்சியுற்ற இராசதுரையும் அவரை அழைத்தவர்களும் தலை கவிழ்ந்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கம் அந்த இடத்தை விட்டுவெளியேறும்போது அவருடன் இன்னும் சிலர் வெளியேறினர்.
தமிழர்களின் உரிமைப்போரின் ஒரு அத்தியாயமான சாத்வீகவழி போராட்டத்தை முன்னெடுத்த தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வில் தமிழர்களின் உரிமைகளை விற்று தனது பதவியை காப்பாற்றிக்கொண்ட இராசதுரையை அழைத்திருந்தது ஏன் என்பதை வரலாறு என்றாவது ஒருநாள் கேட்டே தீரும்.