திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு வழங்கியிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக விரும்புகிறார். இதனாலேயே தமிழீழக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு வித்தை காண்பிக்கிறார் என உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள். 1977 மற்றும் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களே சாட்சி.
வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியமர்த்திவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்கள் கண்காணிப்பில் தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.
1983ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால் எங்கள் யாரிடமும் கேட்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார். இப்போது யாரிடமும் கேட்காமல் டெசோ உருவாக்கப்படும் என்கிறார்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதை மாற்ற செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.