Search

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு தடை? – சீமான் ஆவேசம்

ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடைசெய்கிறது என்றால், காவல்துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று சீமான் தெரிவித்தார்.

ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது:

ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள்.

தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாகத் துடைக்க, தம்மையே அழித்துக்கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப் புலிகள்.

அவர்கள் எம்மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக செத்தவர்கள்.

அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் எனது அண்ணன் பிரபாகரன்.

அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது என்றால், காவல்துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று கேட்கிறேன்.

அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்வது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது இந்திய மத்திய அரசு.

எத்தனை தடைகள் போட்டாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக எமது மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவோம்.

இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை முடக்கிடவும் முடியாது, அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கிடவும் முடியாது.

நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கின்றோம், எங்களைச் சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்காதீர்கள்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த உதவியால் எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது. எமது மக்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது.

இப்போதுகூட கூறுகிறோம். உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்.

இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும். ஒரு இலட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம், ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அத்ன மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *