இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் புத்திஜீவிகளோடு நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் இதைத் தெரிவித்தார். பொது நலவாய நாடுகளின் உச்சிமாநாடு சம்பிரதாயமுறையில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுநலவாய நாடுகளைப் பொறுத்தவரை சில தத்துவங்களை, கோட்பாடுகளை வகுத்து அந்த அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமென்ற நிலை காணப்படுகின்றது. அது அவர்களது கொள்கை.அந்த கோட்பாடுகளை பின்பற்றாத நாடுகளைப் பொறுத்தவரையில் பல்வேறு நடவடிக்கைகள், பல்வேறு காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு புதுவிடயமல்ல. இலங்கையைப் பொறுத்தவரை ஐ.நாடு மனித உரிமைப் பேரவையின் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் பொதுநலவாய கொள்கையின் அடிப்படையில் இலங்கை அரசு பல்வேறு கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கருத்து இருந்தது. இதனால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
பாரதூரமான மனித உரிமை மீறல் நடைபெற்று இருக்கின்றன.ஆயிரக்கணக்கான மக்கள் யுத்தத்தின் பின்னும் அதன்போதும் காணாமற் போயிருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தினர் அலைந்து திரிந்து அந்த விடயத்துக்கு தீர்வைக் கேட்டு பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது விடயம் சம்பந்தமாக இலங்கையரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை, பொறுப்புக்கூறும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் வேண்டுகோளின்படி விசுவாசமான உள்நாட்டு விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பாரதூரமான மனித உரிமை மீறல்களே நடந்துள்ளன.
திருமலை படுகொலை
திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை செயப்பட்ட விடயம் சம்பந்தமாகவும் மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனத் தொண்டர்கள் கொலை செயப்பட்டது சம்பந்தமாகவும் இச் சம்பவங்கள் நடைபெற்று ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டபோதும்கூட, எவ்விதமான முடிவும் இன்னும் காணப்படவில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்படவில்லை. தற்போது இவ்விடயங்களை ஒரு முறையாக முடிவுக்கு கொண்டுவருவது மிகக் கடினமான விடயமாக அமையும். அதற்கு மேலதிகமாக பல்வேறு விடயங்களில் இந்நாட்டில் உள்ளவர்களும் சர்வதேச சமூகத்தினரும் இலங்கை அரசு மீது நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள்.
அதிகாரத்தில் இருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா அவசரமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு அடிப்படைக் காரணம் 13ஆவது அரசியல் சாசனத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை குறைப்பதற்கு, திவிநெகும சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட சில முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையேயாகும்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தலைமையில் திவிநெகும சட்ட மூலம் சம்பந்தமாக இரண்டு தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. ஒன்று மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நீக்குவதாக இருந்தால் அந்த சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு முன்பு முதலில் ஒவ்வொரு மாகாணசபையின் கருத்து அறியப்படவேண்டும்மென்று கூறப்பட்டிருந்தது. அக்காரணத்தினால் மேற்படி சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டு மாகாணசபைகளுக்கு அந்த சட்ட மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இரண்டாவது விடயத் தீர்ப்பில், வடமாகாணத்தில் மாகாண சபை இல்லாத காரணத்தினால் அந்த சட்டத்துக்கு வடமாகாண ஆளுநர் சம்மதம் கொடுத்தார். மாகாண சபையின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைதான் சம்மதம் வழங்கலாம். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் அவ்விதம் சம்மதம் கொடுக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தார்கள். இந்த காரணம் நிமித்தமே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவசரமாகவும் கேவலமாகவும் இந்த செயற்பாடு நடந்தது.
இன்று நீதிமன்றங்களின் சுதந்திரத்தில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. ஒரு சர்வாதிகாரப்போக்கில் நாடு செல்வதைத் தடுக்கவேண்டுமாக இருந்தால் நீதிமன்றம் சுதந்திரமாக செயற்பட வேண்டும். அந்த ஒழுங்கு இங்கு இல்லாத காரணத்தினால் இந்த நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை. சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கையில்லை. நாட்டில் பத்திரிகைச் சுதந்திரமில்லை. சட்டத்தின் ஆட்சியில்லை, உண்மையான ஜனநாயகமேயில்லை. 17ஆவது அரசியல் சாசன திருத்தம் இரத்துச் செயப்பட்டதன் காரணமாக சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர பொதுச் சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவைக்குழு, மனித உரிமைக்குழு ,சுதந்திரமான ஊழல் விசாரணைக்குழு, நீதியாணைக்குழு போன்ற இவையொன்றும் இலங்கையில் இல்லை.
உச்ச நீதிமன்றுக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கும் 17 ஆவது அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்பட கூடியவர்கள் அரசியல் சாசனத்தினுடைய குழுவின் மூலம் நியமிக்கப்பட வேண்டியவர்கள். இந்த நியமனங்கள் எல்லாவற்றையும் இன்று ஜனாதிபதி தான் விரும்பியபடி செய்து கொண்டிருக்கின்றார். ஆகவே, இன்று தேர்தல் நடைபெறலாம். ஆனால் தேர்தல்கள் முறையாக ஒழுங்காக நடைபெறுவதற்கு எவ்வித உறுதியான நிலைப்பாடுகளுமில்லை. வடக்கிலும் கிழக்கிலும் நடந்த தேர்தல்களில் இடம்பெற்ற இராணுவ பங்களிப்பு அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததே.
இதன் காரணமாகவே இலங்கையரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் கோட்பாடுகளை, தத்துவங்களை மீறி நடந்த காரணத்தினாலேயே பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழு
இதேபோன்றதொரு நிலைதான் தெரிவுக்குழு விவகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. உலகத்தை ஏமாற்றுவதற்காகவும் எங்களை திசை திருப்புவதற்காகவும் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என அரசாங்கம் அழைப்பு விடு க்கின்றது.
அரசு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடு த்து தீர்வை வழங்கத்தயாராக இரு க்கின்றபட்சத்தில் எங்களை அழைக்குமா னால் கூட்டமைப்பினராகிய நாங்கள் தெரிவு க்குழுவுக்கு செல்லக் காத்திரு க்கின்றோம். தொடர்ந்தும் தெரிவுக்குழு மூலமாக எங்களை ஏமாற் றலாமென்று அரசோ அதன் தலைவர்களோ கருதுமானால் அதற்கு நாம் தயாராக இருக்கவில்லை என்ற செய்தியைச் சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.












Leave a Reply