Search

ஜெனிவாவில் சிறிலங்காவைத் துளைத்தெடுக்கத் தயாராகும் நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வரும் 1ம் நாள் இடம்பெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்காக, சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஸ்பெய்ன், கனடா, மெக்சிகோ, பிரித்தானியா, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே சிறிலங்காவின் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வலயங்கள், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2006இல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கேலிச்சித்திர ஓவியர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், சனல் – 4 காணொளி தொடர்பான விசாரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இருதரப்புப் பேச்சுக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய விடயங்கள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும் பிரித்தானியாவும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஒரு முறைப்படியான சுதந்திர விசாரணை நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசாங்கம் எப்போது பொறுப்புக்கூறப் போகிறது என்று கனேடிய அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பலமுனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் 1ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான விவாதத்தை அடுத்து, நவம்பர் 5ம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *