சென்னை: வங்கக் கடலில் உருவான நிலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கத்தில் சரக்குக் கப்பல் ஒன்று தரை தட்டியது. கப்பலில் இருந்து பணியாளர்கள் தப்பிக்க முயன்ற போது ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
நிலம் புயலும் சென்னை துறைமுகமும்
சென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் அருகே புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் உச்சபட்ச எச்சரிக்கையாக 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் ஆங்காங்கே நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருந்தன. சென்னை கடற்பரப்பில் மட்டும் 23 கப்பல்கள் நிறுத்தப்பட்டன.
பிரதீபா காவிரி எண்ணெய் கப்பல்
கடற்பரப்பில் நிறுத்தப்பட்டவற்றுள் ஒன்றுதான் மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் செல்ல இருந்த பிரதீபா காவிரி எண்ணெய் கப்பல். புயலுக்கு முன்பே சென்னை துறைமுகத்துக்கு வந்த இக்கப்பலின் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் கடலில் நின்றிருந்தது. சென்னை பெசன்ட்நகர் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த இக்கப்பல் பிற்பகல் 2 மணி அளவில் வெளுத்து வீசிய சூறாவளியால் தரை தட்டியது. இதனால் கப்பல் அடித்துச் செல்லப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் பட்டினப்பாக்க கடற்பரப்பில் நின்றது. அப்போது கப்பலில் மொத்தம் 37 பணியாளர்கள் இருந்தனர்.
தப்பிக்க முயற்சி- ஒருவர் பலி
கப்பல் தரை தட்டியதால் லைப் ஜாக்கெட் உதவியுடன் 21 பணியாளர்கள் கப்பலில் இருந்த 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு வர முயன்றனர். ஆனால் நிலம் புயலினால் எழுந்த பேரலைகள் அவர்களது முயற்சி தோல்வியடைந்தது. அப்போது கரையில் இருந்த மீனவர்கள் தப்ப முயன்றவர்களில் 16 பேரை மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் இருந்த புதுவையைச் சேர்ந்த மோகன்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆனால் 5 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
15 பேர் பரிதவிப்பு
இருப்பினும் கப்பல் கேப்டன் உட்பட 15 பேர் பரிதவிப்புடன் இரவுப் பொழுதை கடலிலேயே கழித்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழகக் கடலோர காவல்படை உள்ளிட்ட உதவியுடன் ஹெலிகாப்டரில் அனைவரும் கரைக்குகொண்டு வரப்பட்டனர். அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேரை தேடும் பணி தீவிரம்
கரைதட்டிய கப்பலில் இருந்து தப்பிக்க முயன்றோரில் ராஜ்கமித்கர், ருசத் ஜாதவ், நிரஞ்சன், கிருஷ்ணாகுரில், ஜோமன் ஜோசப் ஆகியோரது கதி என்ன என்பது தெரியாததால் அவர்களைத் தேடும் பணி துரிதப்பட்டிருகிறது,