அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுக முதலமைச்சருக்கு வேண்டுகோள் – பழ. நெடுமாறன் அறிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
எதிர்பார்த்தபடியே கருநாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெங்களூருக்கு நேரில் சென்று தமிழக காவிரிப் பாசனப் பகுதியில் 12 இலட்சம் ஏக்கரில் வாடிக்கொண்டிருக்கும்  சம்பாப் பயிருக்குத் தண்ணீர் தரும்படி வேண்டிக்கொண்டும், கருநாடகம் மறுத்துவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் நம்முடைய முதல்வர் உடனடியாக  கீழ்க்கண்ட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. காவிரி பாசனப்பகுதியில் வாடிக்கொண்டிருக்கும் சம்பாப் பயிரில் கணிசமான பகுதியையாவது காப்பாற்ற அப்பகுதி விவசாயிகளுக்குத் தங்குத் தடையில்லாத மின்சாரத்தை உடனடியாக வழங்கவேண்டும். அதற்காக தொழிற்சாலைகளும் வணிக நிலையங்களும் தங்களின் மின்சாரத் தேவையில் ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு உதவ முன்வரவேண்டும்.
2. உடனடியாகக் அனைத்துக் கட்சிகள், அனைத்து விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.
3. ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் காவிரிப் பிரச்சினைக்கு இறுதி முடிவு காண்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும்.
4. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெசட்டில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தும் கடந்த 7 ஆண்டு காலமாக அதை வெளியிடாத மத்திய அரசுக்கு நமது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இங்ஙனம்
 
(பழ. நெடுமாறன்)
ஒருங்கிணைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published.