தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை வரவேற்க முடியாத நிலையில் வன்னிப் பாடசாலை அதிபர்கள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை வரவேற்க முடியாத நிலையில் வன்னிப் பாடசாலை அதிபர்கள்!
பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விருந்தினர்களாக அழைக்க முடியாத இக்கட்டான நிலையில் முல்லைத்தீவுப் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது இல்ல மெய்வன்மைப் போட்டிகள், கால்கோள் விழாக்கள் உட்பட பல்வேறு வகையான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது அந்தக் கட்சி சார்ந்த பிரமுகர்களையோ விருந்தினர்களாக அழைக்க முடியாத நிலை உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலையுடன் எந்தவித தொடர்பும் இல்லாத அரசு சார்பான பிரமுகர்களையே இந்த நிகழ்வுக்கு அழைக்க வேண்டிய சூழல் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள பிரபல்யமான ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கிய போதும் அவரைக் கூட அந்தப் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அழைக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நிகழ்வுகளுக்கு அழைக்கும் பட்சத்தில் தம்மீது பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாகவே அதிபர்கள் அவர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.