ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வீடியோ புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில், உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், தனி ஈழம் குறித்து சென்னையில் கருத்து சொன்ன யஸ்வந்த் சின்காவின் கருத்து வெளியிலும், பாராளுமன்றத்திலும் ஒரே நிலைப்பாடாக இருக்கிறது.
ஆனால் சுஷ்மாசுவராஜ், அத்வானி போன்றவர்களின் கொள்கைகள் வேறுபட்டு நிற்கிறது. பா.ஜ.க.வின் நிலைப்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழ்வது இருவருக்கு நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல. எனவே இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே, இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழமுடியும் என்று தெரிவித்தார்.