தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள் சகிதம் பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் செயலகத்திற்கு சென்ற கை.தேவகுமார் (37) என்ற குடும்பத்தவர், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்குமாறு கோரி தனது உடலில் எரிபொருளை ஊற்றித் தீமூட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார்.
மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட இவரை அணுகிய ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இவரை சாந்தப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதோடு, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தில் தமிழீழத்திலிருந்து தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்குப் புலம்பெயர்ந்த இவர், பாங்கொக்கில் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வசித்து வருகின்றார்.
எனினும் வரும் நவம்பர் மாதம் இவரது வதிவிட அனுமதி காலவதியாகும் நிலையில் கொழும்புக்கு தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவர் தீக்குளிக்க முற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.