ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று இரண்டு முக்கியமான உரைகள் இடம்பெறவுள்ளன.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ இன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
அவரது உரை இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மரியா ஒரேரோவின் உரை நேற்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் மரியா ஒரேரோ உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் – இறுதிநேரத்தில் அவரது உரை கைவிடப்பட்டது.
சிறிலங்கா விவகாரம் குறித்தே மரியா ஒரேரோ முக்கியமாக உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது உரை பிற்போடப்பட்டதற்கு, சிறிலங்கா அரசினால் நேற்று பிற்பகல் ஜெனிவாவில் ஒழுங்கு செய்யப்பட்ட பக்கநிகழ்வு ஒன்றே காரணம் என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தேடும் வகையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் விளக்கங்களை அவதானித்து, அதற்கேற்றவாறு முறியடிப்பு வியூகத்தை வகுக்கவே மரியா ஒரேரோவின் உரை இன்றைக்குப் பிற்போடப்பட்டதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது.
அதேவேளை, இன்றைய கூட்டத்தில் மரியா ஒரேரோவின் உரையை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனிதஉரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டுஅறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்த முக்கியமான கருத்துகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நவநீதம்பிள்ளை பேரவையில் விவாதத்துக்காக இன்று சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.