சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் தமிழர் தாயகப்பகுதிகளில் அது உணர்வு பூர்வமாக பலி கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூரும் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் வடமராட்சி கிழக்கின் மணற்காடு மற்றும் உடுத்துறை முல்லைதீவு கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி, சுனாமி பேரலை இலங்கையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு கடற்கரை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டது.
இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கின் மணற்காட்டில் நிகழ்ந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கூட்டமைப்பினரும் மற்றும் மதகுருமார் மீனவ அமைப்புக்கள் என்பவையும் பங்கெடுத்திருந்தன.