வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.நேற்றுமாலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தின் முக்கியமான அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள திட்டங்கள், தன்னை திடுக்கிடச் செய்துள்ளதாகவும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு மாற்ற யோசனைகள், சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கும், ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கும், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு பரிந்துரைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் முரணானது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காவில் உள்ள தமிழ் சமூகத்தின் நலன்கள் குறித்து இந்திய பிரதமர் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார். தமிழர்கள் கெரளவமான, சமத்துவமாக வாழ்வதற்கும், எதிர்கால நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.