Search

ராஜீவ் கொலை வழக்கில் தீர்க்கப்படாத சந்தேகங்கள்: சி.பீ.ஐ. அதிகாரி ரகோத்தமன்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருப்பதாக இந்த வழக்கை விசாரித்த இந்திய மத்திய புலனாய்வு (சி.பீ.ஐ) தலைமை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ‘ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட ரகோத்தமன், தற்போது ‘Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files’(ராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதி: சி.பீ.ஐ. கோப்புக்களிலிருந்து) என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 21 வருடங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், கொலையாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் தூக்கு மேடைக்கு தயாராக இருக்கின்றனர் என்றும் இருந்த போதிலும் அந்த கொலையில் இன்னமும் தீர்க்கப்படாத மர்மங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் வைகோவிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மு.கருணாநிதியிடம் விசாரணை நடத்த தான் முற்பட்ட போதிலும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ரகோத்தமன்.

இதேவேளை, ராஜீவ் காந்தி இறுதியாகக் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த வீடியோப் பதிவு அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் ஒப்படைத்ததாகவும் அப்போதைய ஐ.பி இயக்குநர் எம்.கே.நாராயணன் கூறியிருந்தார். ஆனால் இறுதிவரையில், அவ்வாறானதொரு வீடியோப் பதிவை சி.பீ.ஐ.யிடமோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்பிடமோ நாராயணன் கொடுக்கவில்லை என்றும் ரகோத்தமன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்துக்கு மறுநாள் காலை, அரசியல் விவகாரங்களுக்காகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கமே ராஜீவ் காந்தியை கொலை செய்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போதிலும், அப்போதைய ரோ – புலனாய்வுப் பிரிவின் தலைவர் பாஜ்பாய், நிச்சயமாக விடுதலைப் புலிகள் இந்த கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான கிட்டு, ரோ புலனாய்வுப் பிரிவின் உளவாளி என்றும் பாஜ்பாய் இதன்போது குறிப்பிட்டிருந்தார் என்று ரகோத்தமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், கிட்டு ஒருபோதும் ரோ புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக இருந்திருக்க மாட்டார் என்றும் அவர் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வலது கரமாக இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள ரகோத்தமன், மிகவும் புத்திசாலித்தனமாக ரோ புலனாய்வுப் பிரிவின் தலைவரையே தங்களது உளவாளியாகப் பயன்படுத்திய கிட்டுவின் செயல் ஆச்சரியப்பட வைத்தது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரகோத்தமன் தனது புத்தகத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை தலைமை அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மலிவான விளம்பரத்துக்காக இப்படி எழுதுகின்றனர் என்றும் தங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறியுள்ள கார்த்திகேயன், சர்வதேச பொலிஸார் கூட எங்களது விசாரணையை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துள்ளனர் என்றும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு உணர்வுகளைக் கிளறிவிடுவதற்காக கண்டதையும் எழுதுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *