தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள்இ அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் படுகாயம்
வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பிரதிப் பொலிஸமா அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார்.
கைதிகள் கற்களையும் ஏனைய பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன, கெழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடைச் சிறைச்சாலை கலகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
வெலிக்கடைச் சிறைச்சாலை கலகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையிலான மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 40பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமைக் கவலைக்கிடம் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 11 அதிகாரிகள் காயடமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து கைதிகளும், சிறைச்சாலை அதிகாரிகளும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் சம்பவம் பாரிய கலகமாக வெடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடைச் சிறைச்சாலையை அண்டிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சில கைதிகள் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.