கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் கனடாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
“கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் ஆராய்ந்துள்ளோம். இன்னும் அதனை படித்து வருகிறோம். ஆணைக்குழு சில பகுதிகளை மையப்படுத்தி புனர்வாழ்வு, சட்ட ஒழுங்கு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து உறுதியாக செயற்படுத்துமாறு கனடா வலியுறுத்துகிறது. அதேபோன்று ஆணைக்குழு தவறவிட்ட விடயங்களிலும் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டால் அது பிரச்சினைக்குரிய பகுதிகளில் அரசியல் சமரசத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். ஆனால் அந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் இலங்கையிடம் தீர்க்கமான திட்டம் இல்லை என்பதனை நாம் கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம்.
இறுதிக் கட்ட யுத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆணைக்குழு முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. ஐநா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல மனித உரிமை மீறல்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
இறுதிக் கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு தரப்பினர் தொடர்பிலும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என கனடா தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.
இலங்கை அரசு சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும்.” இவ்வாறு கனேடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.