Search

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழ்ஈழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், ‘ஐ ஹேவ் ட்ரீம்’ என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திரிகோண மலையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியானது. கனடாவில், ‘தமிழ் இனப் படுகொலை’ என்ற குறியீட்டுடன் தபால் தலை வெளியானது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட்டு, மீண்டும் இலங்கைக்குக் கலக்கத்தை உண்டாக்கி இருக் கிறார்கள், ஈழத் தமிழர்கள்.‘விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்… சுதந்திரத் தமிழ் ஈழப் போராட்டம் முடிந்தேபோனது’ என்று சிங்களர்கள் கொக்கரித்தாலும்… புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா-வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்ஷேவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

”எப்படி இது சாத்தியமானது?” என்று,  இங்கிலாந்தில் தபால் தலையைக் கொண்டு வந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். இவர், 2009-ம் ஆண்டு ஈழப்போரின்போது லண்டனில் உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத் தையும் ஈர்த்தவர். ”ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டத்தின் வளர்ந்த பல நாடுகளில், அந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில், அவர்களுக்கு விருப்பமான தபால்தலையை வெளியிட அனுமதி உள்ளது. அந்த விதிமுறைகளின்படியே நான், எங்களது தேசியத் தலைவர் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட முயற்சி எடுத்தேன். இதற்காக முதலில் ‘ராயல் மெயில்’ என்ற இங்கிலாந்து தபால் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். நமது கோரிக்கையை அவர்கள் நியாயமானது என்று கருதி ஏற்றுக்கொண்டால் மட்டுமே தபால்தலை வெளியிட அனுமதி கொடுப்பார்கள். பிரபாகரனின் தபால்தலை வெளியிட நான் விடுத்த விண்ணப்பத்தை ராயல் மெயில் ஏற்றுக்கொண்டு, முதல் தரத் தபால்தலையாக வெளியிட்டது.

இந்தத் தபால்தலையை உபயோகித்து, அனைத்து வெளிநாடுகளுக்கும் தபால் அனுப்ப முடியும். இது எங்களுடைய தமிழ் மக்களின் வெற்றி… எங்கள் நாடு விடுதலை அடையும் வரை எங்கள் போராட்டம் பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார் நம்பிக்கையோடு.

பிரபாகரன் தபால்தலை வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, தமிழ் ஈழக்கொடி, மலர் என்று 11 தமிழீழச் சின்னங்களை தாங்கிய தபால் தலைகள் பிரான்ஸில் வெளியாகி இருக்கின்றன.

‘முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல…’ என்ற கவிஞர் காசிஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது!

– மகா. தமிழ்ப் பிரபாகரன்

நன்றி : ஜூனியர் விகடன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *